Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2655
Title: யாழ்ப்பாணத்தில் தர்ஹா வழிபாட்டுமுறை: ஒருநோக்கு (தீவகத்தைஅடிப்படையாகக் கொண்டது)
Authors: சிவகுமார், மங்களரூபி
Keywords: தர்ஹா வழிபாட்டுமுறை
வலிமார்கள்
ஒலியுல்லாக்கள்
ஹந்தூரி
அராபியர்களது இலங்கை வருகை
Issue Date: 30-May-2016
Publisher: Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka
Citation: 3rd International Symposium. 30 May 2016. Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka.
Abstract: மனிதமனங்களை பண்படுத்தும் ஒருகளமாகவே மதங்கள் விளங்குகின்றன என்பது பொதுவான கருத்து. இத்தகைய மதங்களானவை அவரவர் தனிப்பட்ட சுதந்திரத்தின் அடிப்படையில் அமைந்திருந்தாலும் அவை இறைவன் பற்றிக் கூறும் செய்திகள் ஒருமைத்தன்மை உடையனவாகவே காணப்படுகின்றன என்பதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. அதேநேரத்தில மதங்களுக்கிடையே காணப்படுகின்ற வழிபாட்டு முறைகளே மதங்களைத் தனித்துவப்படுத்தும் பிரதான அம்சங்களாகத் திகழ்கின்றன என்பதும் உண்மையே. அந்தவகையில் இலங்கையில் காணப்படுகின்ற பிரதான மதங்களிலொன்றான இஸ்லாமியமதமும் ~~அல்லாஹ்’’ இறைவன் ஒருவனே என்ற ஓரிறைக் கோட்பாட்டை வலியுறுத்துகிறது. இலங்கையில் வாழுகின்ற இஸ்லாமியர்கள் இனத்தாலும் மதத்தாலும் ஒன்றுபட்டு இறுக்கமான இஸ்ஸாமிய மார்க்கங்களைப் பின்பற்றுபவர்களாகவே உள்ளனர். ஆயினும் அவர்கள் பின்பற்றுகின்ற வழிபாட்டுமுறைகளில் பிரதேசத்திற்குப் பிரதேசம் சிற்சில மாற்றங்கள் காணப்படுவதனையும் கூட அவதானிக்க முடிகிறது. இத்தகைய வழிபாட்டுமுறைகளில் தர்ஹா வழிபாட்டு முறையானது குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக உள்ளது. ‘ஓலியுல்லாக்கள் ’ அல்லது ‘வலியுல்லாக்கள் ’ எனப்படுகின்ற இறைநேசர்கள் இறந்ததன் பின்னர் அத்தகைய வலிமார்கள் அடக்கஸ்தலத்துடன் அமைந்த பள்ளிவாசல்கள் பொதுவாக ‘தர்ஹாக்கள்’ என அழைக்கப்படுகின்றன. அடக்கஸ்தலத்திலிருந்தும், வலிமார்கள் இறந்ததன் பின்னரும் அவர்கள் அற்புதங்களை நிகழ்த்தி மக்களின் குறைகளை தீர்ப்பர் என்ற நம்பிக்கை இஸ்ஸாமியமக்கள் சிலர் மத்தியில் இன்றும் உள்ளது. இத்தகைய தர்ஹா வழிபாட்டுமுறை இலங்கையின் ஒரிருபகுதிகளில் காணப்பட்டாலும்கூட வடகுதியில் அதிலும் தீவகத்தில் மட்டுமே இவ்வழிபாடு காணப்படுகின்றமை இவ்வழிபாட்டு முறையின் சிறப்பம்சமாக உள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தர்ஹா அமைப்பு அல்லாத பள்ளிவாசல்களே அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து ஒருசில கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள தீவுப்பகுதிகளில் (வேலணை, நயினாதீவு) தர்ஹா வழிபாட்டுமுறை சிறப்பாக உள்ளது. அங்கு ஆண்டுதோறும் ஹந்தூரி (கொடியேற்றம்) விழாக்கள் இடம்பெற்று மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். இவ்விழாக்களில் இலங்கையின் பல்வேறுபகுதிகளிலுமுள்ள இஸ்ஸாமியமக்கள் மட்டுமன்றி இந்துமதத்தை பின்பற்றுபவர்களும் கலந்துகொள்கின்றமை தீவகத்திலுள்ள தர்ஹா வழிபாட்டுமுறையின் சிறப்பம்சமாகும். இஸ்லாமிய மார்க்கத்தின்படி தர்ஹா வழிபாட்டுமுறை ஓரிறைக் கொள்கைக்கு முரணான வழிபாட்டுமுறை என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்படுகின்ற சூழ்நிலையில் தம்மை கேரள இஸ்லாமிய வழிவந்தவர்களென அடையாளப்படுத்தும் தீவகத்தில் வாழ்ந்துவருகின்ற இஸ்லாமியர்கள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு வழிபாட்டு முறையாக இம்முறை காணப்படுகின்றது. அவ்வகையில் இவ்வாய்வுக் கட்டுரையானது இஸ்லாமிய மக்களின் மத்தியில் தற்காலத்தில் நாட்டின் பலபகுதிகளிலும் படிப்படியான செல்வாக்கினை இழந்து வருகின்ற தர்ஹா வழிபாட்டு முறையின் சிறப்புக்களையும், அது தற்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தீவகத்தில் பெற்றுள்ள முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதையும், இவ்விடயமாக வருங்காலத்தில் ஆய்வினை மேற்கொள்பவர்களுக்கு ஒரு முன்னோடியான ஆய்வாக அமையவேண்டும் என்ற நம்பிக்கையினையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வானது வரலாற்று அணுகுமுறையின் அடிப்படையில் பண்புசார் முறையில் நோக்கப்படுகின்றது. முதற்தர, இரண்டாந்தர ஆதாரங்கள் ஆய்வின் தேவை கருதிப் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதற்தர ஆதாரங்களில் அவதானிப்புக்கள் நேர்காணல்கள், வினாக்கொத்துமுறைகள், களஆய்வுகள் என்பன பிரதான இடத்தினை பெற்றுள்ளன. இரண்டாம் நிலை ஆதாரங்களில் நூல்கள், கட்டுரைகள் இணையத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள் என்பன அடங்குகின்றன. பொதுப்படையாகப் பார்க்குமிடத்து இத்தகைய தர்ஹா வழிபாட்டு முறையானது தீவகத்திற்கே உரிய இஸ்ஸாமிய வழிபாட்டுமுறைகளில் சிறப்பானதொரு வழிபாட்டு முறைகளிலொன்றாகத் தற்காலத்திலும் திகழ்ந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.
URI: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2655
Appears in Collections:3rd International Symposium of FIA- 2016

Files in This Item:
File Description SizeFormat 
tharga full paper (1).pdf388.12 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.