Abstract:
இவ்வாய்வின் பிரதான நோக்கம் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலிருந்து
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றோரின் போக்கு, அவ்
வேலைவாய்ப்பினால் ஏற்பட்டுள்ள சமூக - பொருளாதார தாக்கங்கள் என்பனவற்றை
இனங்காண்பதாகும். இதற்கு 1992ம் ஆண்டுகளின் பின் இன்றுவரை மத்திய கிழக்கு
நாடுகளில் வேலை பெற்று நாடு திரும்பிய 836 பேர் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்டு
அவர்களிடமிருந்து முதலாம் நிலைத்தரவுகள் சேகரிக்கப்பட்டதுடன் இரண்டாம்
நிலைத்தரவுகளும் இவ்வாய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாம் நிலைத் தரவுகள்
வினாக்கொத்து, நேர்காணல் மூலமும், இரண்டாம் நிலைத்தரவுகள் மத்திய வங்கி
ஆண்டறிக்கைகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அறிக்கைகள் மூலமும்
பெறப்பட்டுள்ளன. இத்தரவுகள் விபரணப் புள்ளிவிபரவியல் வரைபடமுறை, கைவர்க்கச்
சோதனைமுறை, குறியீட்டுச் சோதனைமுறை, பிற்செலவுப் பகுப்பாய்வு முறை போன்றவை
களினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இவ்வாய்வின் முடிவாக இலங்கையின் மொத்த
தனியார் மாற்றல்களில் ஆய்வுப்பிரதேச மக்கள் பெரும் பங்களிப்புச் செய்துள்ளமையையும்,
ஆய்வுப் பிரதேச வேலையின்மையை குறைப்பதிலும், சேமிப்பு, முதலீடு என்பனவற்றை
அதிகரிப்பதிலும், மக்களின் வாழ்க்கைத்தரம், திருமணவாய்ப்புக்கள், பிள்ளைகளின்
கல்விநிலை என்பவைகள் மீது மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு பெரும் பங்களிப்புச்
செய்துள்ளது. அத்துடன் கணவன், மனைவி, பிள்ளைகளுக்கிடையிலான உறவு, மற்றும்
குடும்ப வாழ்வியல் அம்சங்களிலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான வேலைவாய்ப்பு பாரிய
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.