Abstract:
அரசுகளின் அரசியல் சுதந்திரத்தினைப் பாதுகாத்து , அவ்வரசின் தொடர்ச்சியான இருப்புக்குப்
பங்காற்றும் ஒரு அரசின் அடிப்படை நிறுவனமே இராணுவம் அல்லது ஆயுதப் படைகள்.
அரசின் சட்டத் தன்மையினையும் மக்களின் ஜனநாயக விருப்பங்களையும் பாதுகாப்பதற்கு
அவை கடமைப்பட்டுள்ளன. இப்படைகள் ஒரு அரசின் ஜனநாயகத் தொழிற்பாட்டிற்கு
உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் ஒரு
நிறுவனமாகும். இத்தத்துவம் தென்னாசிய அரசுகளில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதனை
அவதானிக்கலாம். இந்தியாவினைப் பொறுத்தவரையில் ஆயுதப் படைகளானது இந்திய
ஜனநாயக அரசாங்கத்தின் ஒரு நிறுவனமாகப் பார்க்கப்படுகின்றது. பாகிஸ்தானைப்
பொறுத்தவரையில் பாகிஸ்தானிய கருத்தியலின் (இரு தேசக் கோட்பாடு) பாதுகாவலனாக,
அதன் தோற்றத்தினை வெளிப்படுத்தும் அங்கமாக ஆயுதப்படைகள் நோக்கப்படுகின்றன.
இலங்கை இந்திய மாதிரியிலான பாணியினையே ஆயுதப்படைகள் விடயத்தில்
பின்பற்றுகின்றது. வங்காளதேசினைப் பொறுத்தவரையில் தென்னாசியாவில் மிகவும் பிந்திய
சுதந்திர அரசு என்ற ரீதியில் அதனது இருத்தலுக்கான ஒரு பாதுகாப்பு நிறுவனமாக
ஆயுதப் படைகள் நோக்கப்படுகின்றன. நேபாளத்தில் மன்னராட்சி ஒழிக்கப்படும் வரை
மன்னரின் அதிகாரத்தினைப் பாதுகாப்பதற்கான இயந்திரமாக அது பார்க்கப்பட்டு வந்தது.
இவ்விதம் ஆட்சிச் செயற்பாட்டில் இராணுவத்தின் பங்கு குறித்து தென்னாசியாவின் பல்வேறு
அரசுகளும் பல்வேறு மாதிரிகளினை உலகுக்கு வழங்குகின்றன. இதன்படி தென்னாசிய
அரசியலின் மிகப் பிரதான இரு பண்புகள் ஜனநாயகத்தின் வீழ்ச்சியும் அரசியலில்
இராணுவத்தின் செல்வாக்கும் ஆகும். விசேடமாக தென்னாசியாவின் இரு முக்கிய
அரசுகளான பாகிஸ்தானினதும் வங்காளதேசத்தினதும் அரசியலில் இராணுவத்தின்
செல்வாக்கு என்பது குறிப்பிட்டுக் கூறக்கூடியது. இப்பின்புலத்தின் கீழ் பாகிஸ்தானிய
அரசியலில் இராணுவம் செல்வாக்குச் செலுத்தும் விதத்தினை இக்கட்டுரை ஆராய்கின்றது.