dc.description.abstract |
உலகின் புராதனமான நாகரிகங்களிற் சமயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. உலக
வாழ்வியல், ஒழுக்கம், தத்துவ சிந்தனை, கலை, இலக்கியம் முதலான துறைகளிற் சமயத்தின் செல்வாக்கு காலங்காலமாக இருந்து வருகின்றது. சமயங்கள் பெரும்பாலும் மனிதவாழ்க்கை, உலகம், இறைவன் ஆகிய முப்பொருள்களைப் பற்றிப் பேசுகின்றன. கடவுள் நம்பிக்கை, வழிபாடு, தத்துவசிந்தனை, ஒழுக்கசீலங்கள் போன்றன சமயப் பெருநெறிகளில் அடிப்படையான விடயங்களாகும். சமயமானது பிறப்பிலிருந்து இறப்புவரை மனித வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்துகின்றது. அந்த வகையில் இந்து தத்துவநூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற பகவத்கீதை குறிப்பிடும் மனிதவாழ்வின் இறுதி இலக்குப்பற்றி இங்கு ஆராயப்படுகின்றது. இந்து தத்துவ நூல்களுள் ஒன்றான பகவத்கீதையில் மனித வாழ்வின் இறுதி இலக்கு பற்றிச் சொல்லப்படும் கருத்துக்களை தத்துவார்த்த அடிப்படையில் ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். பகவத்கீதையில் மனித வாழ்வின் இறுதி இலக்கு எனக்கொள்ளும் விடயங்கள், அதனை அடைவதற்கு அவை கூறுகின்ற வழிமுறைகள் என்பவற்றைக் கண்டறிவது ஆய்வுக்குரிய பிரச்சினையாகும். கீதையின் சிறப்பினைக்கூற அவற்றிற்கான விளக்கநூல்கள் மிகுந்தளவிலே காணப்படுகின்றன. அந்நூல்களை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றுப் பகுப்பாய்வு முறையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படும். பகவத் கீதையில் வினைப்பயன், மறுபிறப்பு என்பன பற்றிய கோட்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிறவி என்பது வினைப்பயனுக்கேற்ப மீண்டும் மீண்டும் இடையறாது நிகழ்வது. அது துன்பம் கலந்தது. பிறிவியிலிருந்து விடுபடுவதே மனித வாழ்வின் இறுதி இலக்காகும். அது துன்பம் நீங்கிய நிலை. இவ்வடிப்படையில் பகவத்கீதை குறிப்பிடும் மனித வாழ்வின் இறுதி இலக்கினை இனம் கண்டு, அவற்றினை வெளிக்கொணர்தல் இவ்வாய்வின் கருதுகோளாகும். |
en_US |