Abstract:
இன்றைய அறிவியல் உலகில் மாற்றங்களை உள்வாங்கி செயற்படுத்தும் பங்காளிகளாக
விளங்குபவர்கள் ஆசிரியர்களேயாவர். வாகரைப் பிரதேசப் பாடசாலைகளில் கற்பிக்கும் பெரும்பாலான
ஆசிரியர்கள் தூரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இந்த வகையில் தூரப்பிரதேச
ஆசிரியர்கள் பாடசாலைகளின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையிலும், இப்பிரதேசத்திலிருந்து
மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாக வேண்டும் என்ற நோக்கத்தோடும் கல்வி
வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் போது எவ்வாறான சவால்களுக்கு முகம்
கொடுக்கின்றார்கள் என்பதை இனங்காணுவதற்கானவே மட்டக்களப்பு மாவட்டத்தின் யுத்தம், இயற்கை
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நிலையில் கல்வியில் பின்தங்கிய நிலையிலுள்ள வாகரைப்
பிரதேசத்திற்குட்பட்ட 12 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகரைப் பிரதேசப் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பல்வேறு
சிரமங்களின் மத்தியிலும் எவ்வகையில் பாடசாலைச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள், எவ்வாறான
சமூகப், பொருளாதாரப், போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர், மாணவர்களின்
கல்வி நிலை தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கான காரணங்கள் போன்றவற்றை
ஆராய்ந்து கல்வியின் அவசியத்தை பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் எடுத்துக் காட்டுவதோடு
ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடனும், சிறந்த சேவை மனப்பாங்குடனும் செயற்படுவதன்
அவசியத்தையும் இவ்வாய்வானதுஎடுத்துக்காட்டுகின்றது. இந்த வகையில் அதிபர், ஆசிரியர்கள்,
மாணவர்களிடமிருந்து வினாக் கொத்து, நேர்காணல், கலந்துரையாடல் போன்றவற்றின் மூலம் பெறப்பட்ட
தரவுகளிலிருந்து தீர்வாலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.