Abstract:
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பிரதேசமானது தொன்மையான வரலாற்றுப்
பாரம்பரியங்களைக் கொண்ட தனித்துவமான பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இப்
பிரதேசத்தில் ஆரியச்சக்கரவர்த்திகளால் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் நல்லூரைத் தலைநகராகக்
கொண்டு அமைக்கப்பட்ட யாழ்ப்பாண அரசில் இந்துமதம் சிறப்புநிலை அடைந்திருந்ததை அக்கால
அரச சின்னங்கள், விருதுப்பெயர்கள், ஆலயங்கள் வழிபாட்டு முறைகள் என்பன மூலமாகவும் இக்காலம்
தொடர்பாக பிற்காலத்தில் தோற்றம் பெற்ற மூல இலக்கியங்களான யாழ்ப்பாண வைபவமாலை,
செகராசசேகரமாலை, கைலாயமாலை, வையாபாடல், கோணேசர் கல்வெட்டு, மட்டக்களப்பு மான்மியம்
போன்றவற்றின் மூலமாக அறியமுடிகின்றது. இந்துமதம் இக்காலத்தில் சிறப்பு நிலை அடைந்திருந்த
அதேவேளை பௌத்த, இஸ்லாம் மதங்கள் நிலவியிருந்ததையும் பிற்பட்ட காலத்தில் கிறிஸ்தவமதம்
அறிமுகமாவதையும் காணமுடிகின்றது. யாழ்ப்பாணத்தரசர் காலச்சமயநிலையை வரலாற்று நோக்கில்
ஆய்வு செய்வதாக இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தரசர் காலம் தொடர்பாக பல
அறிஞர்களால் ஏற்கனவே பல நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தாலும் அவர்களது
படைப்புக்களில் யாழ்ப்பாணத்தரசர் காலச் சமயம் ஓர் பகுதியாகவே இடம்பெற்றுள்ளது. எனவே
இக்கட்டுரை யாழ்ப்பாணத்தரசர் காலச் சமயநிலையை முதன்மைப்படுத்திய வகையில் எழுதப்படுகின்றது.
இக்கட்டுரை யாழ்ப்பாண அரசர் காலச்சமய நிலையை ஆராயும்போது யாழ்ப்பாண அரசர் காலத்திற்கு
முன்னான சமய நிலையையும், யாழ்ப்பாண அரசர்களது சமய நிலையையும் அரசில் இடம்பெற்ற சமய
சின்னங்கள், கோயில்கள், வழிபாட்டு முறைகள், பிற மதங்கள் என்பவற்றையும் ஆய்வு செய்கின்றது.
இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுவதன் நோக்கம் யாழ்ப்பாணத்தரசர் காலத்தில் இந்துமதம் உச்சநிலை
அடைந்திருந்தது என்பதை அடையாளப்படுத்தவும், அக்காலத்தில் இருந்த பண்பாட்டுச்சின்னங்களை
ஆவணப்படுத்தவும், இன்றைய பண்பாட்டில் அக்காலப்பண்பாட்டுச் செல்வாக்கை அடையாளம் காணவும்
மேற்கொள்ளப்படுகின்றது. இவ் ஆய்வுக்கான முதலாம் தரத்தரவுகளாக தொல்லியல் எச்சங்களான
கட்டடச்சான்றுகள், நாணயங்கள், கல்வெட்டுக்கள், இக்காலம் தொடர்பாக கூறஎழுந்த மூலநூல்கள்
என்பவற்றையும், இரண்டாம்தரத் தரவுகளாக இக்காலம் தொடர்பாக பிற்காலத்தில் எழுந்த
இலக்கியங்களையும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட
ஆய்வாளர்களது நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், மற்றும் சஞ்சிகைகள், இணையத்தகவல்கள்
என்பவற்றையும் ஆதாரமாகக் கொண்டு இவ் ஆய்வுக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.