Abstract:
வைதிக தத்துவங்களுள் ஒருமை வாதம் பேசும் ஒரே கோட்பாடு அத்வைதமாகும். இது கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவைச் சேர்ந்த சங்கராச்சாரியாரால் தோற்றம் பெற்றது. இதன் பின்பு தோற்றம் பெற்ற இராமானுஜரின் விசிட்டாத்வைதம், மத்துவாச்சாரியாரின் துவைதம் அத்தோடு சைவசித்தாந்தம் ஆகிய கோட்பாட்டு நெறிகள் அத்வைதத்தை விமர்சிக்க தவறவில்லை. இப்பெருந்தத்துவங்களுள் அத்வைதம் ஏனைய தத்துவங்களை விட மனிதநேய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி நிற்கின்றது. பொதுவாக தத்துவங்கள் மனிதநேயச் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவை. தத்துவங்களின் நோக்கம் இருப்புப் பொருட்களின் தேடலை மேற்கொள்வது மட்டுமே. ஆனால் இத்தகைய தேடல்களுக்கு மத்தியில் மனிதநேய ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் தத்துவமாக எங்ஙனம் அத்வைதம் அமைகின்றது என்பது ஆய்வுப் பிரச்சினையாகவுள்ளது. பிரம்மம், ஜீவன், சடவுலகம் போன்ற தத்துவ ஞானங்கள் பற்றிய தேடல்களுக்கு மத்தியில் மனிதநேய ஒருமைப்பாட்டை எங்ஙனம் அத்வைதக் கோட்பாடு சுட்டி நிற்கின்றது என இனங்காணப் து இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வு, கோட்பாட்டு ஆய்வு, ஒப்பியல் ஆய்வு ஆகிய முறைகளைப் பின்பற்றுகின்றது. அத்வைதச் சிந்தனைகள் எவ்வாறு மனிதநேயங்களை வெளிப்படுத்துகின்றன என்பது பற்றி ஆராய்வதற்கு கோட்பாட்டாய்வு பயன்படுத்தப்படும். சங்கரரின் அத்வைதத்துடன் ஏனைய வைதிக தத்துவங்களை ஒப்பிட்டு மனிதநேய ஒருமைப்பாடு பற்றி ஆராய்வதற்கு ஒப்பியல் ஆய்வு பயன்படுத்தப்படும். இவ்வாய்வின் முதலாம் தர மூலங்களாக சங்கரரின் நூல்கள், பாஷ்யங்கள் என்பன பயன்படுத்தப்படுகின்றன. துணை மூலங்களாக சங்கரரின் அத்வைதம் தொடர்பாகவும், இந்திய மெய்யியல் தொடர்பாகவும் வெளிவந்த நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்வைதம் வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்துகின்ற தத்துவமாகும். ஏனைய தத்துவக்கோட்பாடுகள் போன்று அத்வைதம் ஜீவாத்மாக்களுக்கிடையே பேதம் கற்பிக்காமல் ஒருமை வாதத்தினூடாக மனிதநேய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி நிற்கின்றது.