Abstract:
தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களை பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என்று வகைப்படுத்தலாம். ஒரு தலைவனின் முழு வாழ்க்கை வரலாற்றையும் கூறுவது பேரிலக்கியமாகும். சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, கம்பராமாயணம் போன்ற இலக்கியங்கள் பேரிலக்கிய வகையினுள் அடங்கும். தலைவனின் வாழ்க்கையில் ஒரு பகுதியை மட்டும் கூறுவது சிற்றிலக்கியமாகும். உதயகுமாரகாவியம், நாககுமாரகாவியம், யசோதரகாவியம், சூளாமணி, நீலகேசி என்பன சிற்றிலக்கிய வகையினுள் அடங்கும். அந்தவகையில் குறவஞ்சி, பரணி, தூது, பள்ளு, உலா, அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், காவடிசிந்து என தமிழில் தொண்ணூற்றி ஆறு வகையான சிற்றிலக்கியங்கள் உண்டு. இறைவனோ அல்லது அரசனோ யானை, தேர், குதிரை போன்றவற்றில் ஏறி இசைக் கருவிகளை இசைப்போர் முன்னேவர மக்கள் புடைசூழ நகர வீதிகளில் வலம் வருவதை ”உலா” என்னும் சொல்லால் குறிப்பிடப்படுகின்றது. உலா வருபவர்களை கண்டு மகளிர் காதல் கொள்வதை கருப்பொருளாகக் கொண்டு பாடப்படுவதே உலா இலக்கியமாகும். அந்த வகையில் திருக்கைலையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் உலா சிறப்பை பாடும் இலக்கியமே ”ஆசுகவி“ என போற்றப்படும் சேரமான்பெருமாளால் இயற்றப்பட்ட திருக்கைலாய ஞான உலாவாகும். இவ்வுலா இலக்கியம் சிவபெருமானின் முழுமுதற் தன்மையை விளக்கியுள்ள விதம் சிறப்புமிக்கதாகும். கைலையில் அரங்கேற்றப்பட்ட இவ்விலக்கியம் அங்குள்ள மாசாத்தனார் வாயிலாக திருப்பிடவூருக்கு வந்து தமிழ் நாட்டில் உலவுவதாகிற்று. ”ஆதியுலா” எனப் போற்றப்படும் இவ்விலக்கியத்தில் உலா பிரபந்தத்திற்கான அடிப்படை அம்சங்கள் திறம்பட வெளிப்படுகின்றன. அந்தவகையில், இவ்விலக்கியத்தில் விரவியுள்ள உலா பிரபந்தத்திற்கான அடிப்படை அம்சங்களை எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். திருமுறைகளில் சேரமான் பெருமாளின் பிரபந்தங்களின் மூலங்களே ஆய்வின் எல்லையாகக் கொள்ளப்படுகின்றன. சேரமான் பெருமாளின் பிரபந்தங்களின் மூலங்கள் இவ்வாய்வின் முதன்னிலைத் தரவுகளாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. சேரமான்பெருமாளின் பிரபந்தம் தொடர்பாக வெளிவந்த நூல்களும், உலா இலக்கியம் தொடர்பான நூல்களும், இவ்வாய்வுடன் தொடர்புடைய ஏனைய ஆய்வுக்கட்டுரைகள், சஞ்சிகைகள், இணையத்தள செய்திகள், பிற ஆக்கங்கள் இவ்வாய்வின் துணைத்தரவுகளாக அமைகின்றன. இறுதியாக இவ்வாய்வானது, முன் மாதிரிகள் எதனையும் பின்பற்றாத போதிலும் உலா பிரபந்தத்திற்கான அடிப்படை அம்சங்கள் திருக்கைலாயஞான உலாவில் சிறப்பான முறையில் விரவியுள்ளது என்பதை முடிவாக உரைக்கின்றது.