Abstract:
சூழலியல் என்பது இன்று வெகுவாக வளர்ந்து வருகின்ற ஒரு துறையாகும். தமிழிலே அறிவியற்றமிழ், கணினித் தமிழ் என்று வளர்ந்து வருகின்ற நிலையிலும் சூழலியல் தொடர்பான சிந்தனைத் துறை இன்னமும் முகிழ்விடத் தொடங்கவில்லை என்றே கூறலாம். சூழலியல் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் தாவரம், விலங்குகள் பற்றிய அறிவியற் துறையாகும். இத்துறையானது சூழலுக்கும் உயிரினங்களுக்கும் இடையிலான உறவை ஆராயும் ஓரு துறையாக வளர்ச்சி கண்டுள்ளது. சங்க இலக்கியங்கள் பொதுவாகவே முதல், கரு, உரிப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன. ஒவ்வொரு செய்யுளும் ஏதேனும் ஒரு நிலத்தை அல்லது அது சார்ந்த கருப்பொருட்களை பின்புலமாகக் கொண்டே உரிப்பொருளை விளக்குகின்றன. சங்க அகப்பாடல்களில் இக்கருத்தின் ஆதிக்கத்தைத் தெளிவாகக் கண்டுணரலாம். பழந்தமிழரிடத்தே காணப்பட்ட சூழலியல் தொடர்பான சிந்தனையை ஆய்ந்தறிவதே இவ் ஆய்வின் பிரதான நோக்கமாகும். சூழலியல் என்பது இன்று ஓர் அறிவு சார்ந்த துறையாக வளர்ந்துள்ள போதும் பழந்தமிழரிடத்தே அவ்வாறு அல்லாமல் ஒரு அவதான நிலையில் பயன்பட்டுள்ளமை புலனாகின்றது. இன்று சூழலியல் தொடர்பான சிந்தனையானது மனிதனின் அவசியத் தேவைகளிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது. இதன் விளைவாகவே நிலம், நீா், வளி, ஒலி மற்றும் உணவு மாசடைதல் என இச் சிந்தனைத்துறை அகலக்கால் பதித்துள்ளது. இவ் ஆய்வின் மூலங்களில் குறிப்பாக முதல்நிலைத் தரவுகளாக சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகை எடுத்தாளப்படவுள்ளது. இந்த ஆய்வினூடாகப் பழந்தமிழரின் சூழலியல்சார் சிந்தனைகள் தேடித் தொகுக்கப்படுவதோடு, குறிப்பாக அவற்றிலே நிலம், நீா், வளி, ஒலி மற்றும் உணவு மாசடைதல் தொடர்பாக ஆராய்ந்து அச்சிந்தனைகளைப் பட்டியற்படுத்துவதாக அமையும். இத்தகைய ஆய்வுகள் மூலம் சூழலியற்ச் சிந்தனைகளின் வளர்ச்சியில் அதன் முன்னோடிகளாக (pioneers) தமிழா்கள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கும் சூழலுக்கும் இடையே காணப்பட்ட அந்நியோன்னியத் தொடர்பும் இலக்கிய ஆதாரங்கள் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது பகுப்பாய்வு, விபரண ஆய்வு போன்ற ஆய்வுமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழரின் சூழலியற் சிந்தனை வளர்ச்சியிலே அவர்கள் சூழலோடும், இயற்கையோடும் கொண்டிருந்த உறவு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் நிலமாசு, நீா்மாசு, வளிமாசு மற்றும் ஓலிமாசு பற்றிய அவர்களது முன்னுதாரணமான பண்பாடும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான ஆய்வுகள் தமிழரின் எதிர்வுகூறும் விஞ்ஞானத்தன்மை வாய்ந்த சிந்தனைகளின் புரிதலுக்கும் வழிகோலும் எனலாம்.