dc.description.abstract |
சினிமா மனித வாழ்வுடன் பிரிக்க முடியாத ஒரு கலை. சமகாலத்தில் வர்த்தகத்தை மையப்படுத்திய 'மசாலச் சினிமாக்கள்' பல வழிகளில் சமூகத்தை ஆக்கிரமிக்கின்றது. குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை சினிமாவில் பெரும் நாட்டம் கொள்கின்றனர். சினிமாக்கள் ஜனரஞ்சகச் சினிமா (Popular cinema) என்றும் கலைத்துவ சினிமா (Art cinema) என்றும் இரண்டாகப் பிரித்து நோக்கும் வழக்கம் உண்டு. கதாநாயகன் கதாநாயகியை மையப்படுத்தி காதல், நகைச்சுவை, வீரம், சண்டை என்பவற்றை யதார்த்த வாழ்வுக்கு அப்பால் புனைந்து அதற்கான அழகியலுடன் வடிவமைத்து வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டவை ஜனரஞ்சகச் சினிமாக்கள் ஆகும். இது சமூக, பண்பாட்டு, அரசியற் கருத்துக்களை தமக்கான அழகியல் ஒழுங்கில் வெளிப்படுத்தும் ஊடகம். இலாபத்தையும் மகிழ்வூட்டலையும் அடிப்படையாகக் கொண்ட இச்சினிமாவே, மக்களிடம் பிரபல்யம் அடைந்துள்ளது. ஜனரஞ்சகத் தன்மை கொண்ட தமிழ்ச் சினிமாக்கள் சமூக அரசியல், முற்போக்கு, சாதிய அடக்குமுறை என்பவற்றைப் பேசினாலும், பெண்களைக் காட்சிப் பண்டங்களாக்குவதும், வன்முறையைத் தூண்டுவதும் சமூகத்தை அதன் பாா்வைக்குள் இழுப்பதும் நடக்கின்றது. ஒரு இளைஞன் நினைத்தால், சமூகத்தை மாற்றிவிடலாம் என்பதும், துப்பாக்கியால் எதிரியினை அழித்துவிடலாம் என்பதும் இச்சினிமாக்களின் அச்சாணியாகும். இவை யதார்த்தத்திற்கு மாறானது. இதனை ஏற்று கைதட்டி வரவேற்றுக் கொண்டாடும் நுகர்வுப் பண்பாடே எம்மிடம் நிலவுகின்றது. மக்களது வாழ்வை யதார்த்த பூர்வமாக வடிவமைத்துத் தருவது கலைத்துவ சினிமாவாகும். கலைத்துவ சினிமா மெய்மையைப் பதிவு செய்து அகவயக் காட்சியை மீண்டும் உருவாக்குவதையும், குற்ற உணர்வை வெளிப்படுத்துவதையும், மெய்பொருளைக் காணுதலையும் பிரதானமாகக் கொண்டது. காலத்திற்கேற்ப உண்மைகளைச் சொல்லும். இது மனிதருடன் தொடர்புபட்ட உணர்வுகள், நினைவுகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவது. மனிதரது நெருக்கடியான வாழ்க்கைகளை கலையழகுடன் கூறுவது. வில்லன், கதாநாயகன் அற்ற இயல்பான காட்சிப்படுத்தல்களைத் தருவது. இவ்வாறான சினிமாக்களைக் காட்சிப்படுத்தி, கலந்துரையாடுவது சமகாலத் தேவையாகும். சமூக வாழ்வியலை மீள் வடிவில் தரும் ஊடகமாக கலைத்துவ சினிமாக்கள் காணப்படும் விதத்தினை 2015 இல் மட்டக்களப்பில் நடைபெற்ற ஐரோப்பிய திரைப்பட விழாவை மையப்படுத்தி ஆராயப்படுகின்றது. |
en_US |