Abstract:
ஒரு அரசு தனது நலன்களை பாதுகாப்பதற்கும் நலன்களை உறுதியான செயற்பாட்டு நோக்கங்களாக்குவதற்குமான இலக்குகளை சிந்தித்து செயற்படுத்துவதற்கான முதல் நிலை மூலக் கூறு வெளிநாட்டுக் கொள்கை எனலாம் (Ford & Lincoln, 1962) இதனடிப்படையில் தொடர்பாடலின் விருத்தி மறுபக்கத்தில் பொருளாதார வளங்களின் அருந்தல் விதி என்பன ஒன்று சேர்ந்து நாடுகளை கிராமங்களுக்கு நிகரானதாக்கியுள்ளது. இவ்வகையில் இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான இராஜ தந்திர மற்றும் வர்த்தக உறவினை குறிப்பதாக காணப்படுகின்றது. கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையில் இடம் பெற்ற இன முரண்பாட்டினை தொடர்ந்து இலங்கை அரசானது பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. இவ்யுத்த முடிவானது இலங்கையின் வெளிநாட்டு கொள்கையிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தென்னாசிய பிராந்தியத்தில் அபிவிருத்தியடைந்து வரும் நாடாக திகழும் இலங்கை அரசானது தேச அபிவிருத்தி என்பதில் பின்னடைவினை எதிர் கொள்கின்றது. இதற்கு கடந்த மூன்று தசாப்த காலமாக இடம் பெற்ற இன முரண்பாடே காரணமாகும். இவ்வின முரண்பாட்டினால் ஏற்பட்ட யுத்தத்தினால் தேசத்தினை கட்டியெழுப்புவதில் பெரும் சவால்களை எதிா் கொண்டிருந்தது. மேலும் இலங்கையின் யுத்த முடிவினை தொடர்ந்து வந்த அரசாங்கங்கமானது நாட்டின் சமூக, பொருளாதார, பாதுகாப்பு நடவடிக்கைகளை பேணுவதற்காக வெளியுறவுக் கொள்கையினை அமைத்துக் கொண்டமையினை காணலாம். யுத்தத்தின் பின்னரான அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையானது இலங்கை அரசியலிலும் சர்வதேச ரீதியிலும் எவ்வாறான தாக்கத்தினை செலுத்தின என்பது இவ்வாய்வினுடைய பிரச்சினையாக காணப்படுகின்றது. இதனடிப்படையில் 2009 – 2015 வரையிலான அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையானது எவ்வாறான தாக்கங்களை இலங்கை அரசியலில் ஏற்படுத்தியது என்பதனை கண்டறிதல் என்ற நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இவ்வாய்வானது பண்புசார் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக முதனிலைத் தரவுகளாக நேர்காணல் வரையுறுக்கப்பட்ட அவதானம் போன்றனவும் இரண்டாம் நிலைத்தரவுகளாக முன்னைய ஆய்வுகள், நூல்கள், சஞ்சிகைகள், புள்ளிவிபரங்கள் போன்றனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில் யுத்த முடிவினை தொடர்ந்து வெளிநாட்டுக் கொள்கையானது இலங்கையில் அரசியல் பொருளாதார வரத்தக மற்றும் சமூக ரீதியாக தாக்கத்தினை செலுத்தியதுடன் சர்வதேச ரீதியிலும் பாரிய தாக்கத்தினை செலுத்தியிருந்தன என்பது கண்கூடு.