Abstract:
தற்கால அரசுகளில், அரசியல் கட்சிகள் தவிர்க்க முடியாத அம்சமாக விளங்குகின்றன. மக்களாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் வாக்குரிமை, பிரதிநிதித்துவ ஆட்சியியல் என்பன வளர்ச்சியடைய ஆரம்பித்தன. பாராளுமன்ற அரசாங்க முறையின் வளர்ச்சியோடு கட்சிகளின் பங்கு இன்றியமையாத ஒன்றாக விளங்குகின்றது. இலங்கையின் மூன்றாவது தேசியக் கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி (J.V.P) விளங்குகின்றது. 1965 ஆம் ஆண்டு மே 20ம் திகதி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வாலிய முன்னணியின் தலைவரான ரோகண விஜயவீர பின்னர் இக்கட்சியின் ஸ்தாபகர் ஆவார். இக்கட்சி ஆரம்பத்தில் இடதுசாரிக் கொள்கையினை தீவிரமாக முன்னெடுக்கும் அமைப்பாக விளங்கியது. 1971, 1989 ஆகிய ஆண்டுகளில் அரசுக்கெதிரான ஆயுத நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டமையினால் இக்கட்சியின் தலைவர் உட்பட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு இக்கட்சி தடைசெய்யப்பட்டது. பின்னர் 1994 ஆம் ஆண்டு முதல் இக்கட்சி மீண்டும் செயற்பட அனுமதி வழங்கப்பட்டதோடு 2001, 2004ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு 39 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டனர். அதன் பின்னர் கட்சியில் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக இக்கட்சி வீழ்ச்சியினை அடையத் தொடங்கியிருந்த போதும் இகக்ட்சியின் அரசியல் கலாசார முறை இலங்கை அரசியலினைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவதனை அவதானிக்க முடிகின்றது. இத்தகைய பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல்முறை, கொள்கை, கட்சியின் வளர்ச்சி, பிளவு, இனவாதம் என்பன குறித்து விமர்சன முறையில் நோக்குவதாக இவ் ஆய்வுக்கட்டுரை அமைகின்றது. இவ் ஆய்வுக் கட்டுரையானது விபரண முறையியல் பகுப்பாய்வு முறையியல் விமர்சன முறையியல் என்பவற்றின் துணைகொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. இவ் ஆய்வுக்கான தரவுகள் இரண்டாம் நிலைத்தரவுகள் மூலம் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.