Abstract:
பன்மைத்துவ இலங்கையில் மூன்று தாசாப்த காலமாக இடம்பெற்று வந்த உள்நாட்டு யுத்தத்துக்குப் பின்னரான சூழ்நிலையில் இன நல்லுறவு என்ற எண்ணக்கரு ஆய்வாளர்களின் கரிசனை பெற்ற ஒரு பிரதான விடயமாகும். இந்தவகையில் மன்னார் மாவாட்டத்தின் முசலி பிரதேசத்தில் முஸ்லிம்களின் வெளியேற்றத்திற்கு முன்னர் (1990) தமிழ் - முஸ்லிம் உறவு எவ்வாறு காணப்பட்டது என்பதை கண்டறிவது இவ் ஆய்வின் நோக்கமாகும். பண்புசார் அடிப்படையில் அமையும் இவ்வாய்வு, நேர்காணல் முறை மூலம் பெறப்பட்ட முதலாம் நிலைத் தரவுகளை, குறியீட்டல் (coding) முறைமையூடாக பகுப்பாய்வுக்குட்படுத்தியுள்ளது. முசலிப் பிரதேசத்தில் முஸ்லிம்களின் வெளியேற்றத்திற்கு முன்னர் தமிழ் - முஸ்லிம் ஆகிய இரு சமூகங்களிடையே அரசியல், பொருளாதார, சமூக, சமய, கலாசார, கல்வி போன்ற சகல துறைகளிலும் நல்லுறவு பேணப்பட்டுள்ளது என்பது இவ்வாய்வில் கண்டறியப்பட்ட விடயமாகும். அந் நல்லுறவுக்கு இரு இனங்களின் தாய்மொழியாக தமிழ் காணப்பட்டமை, அயல் கிராம வாழ்க்கை முறைமை போன்றன அடிப்படை உறவுப் பாலமாக திகழ்ந்துள்ளன. பழைய இன நல்லுறவை மீண்டும் நினைவுபடுத்துவதாகவும், தமிழ் - முஸ்லிம் உறவில் புதியதொரு மாற்றத்தினை ஏற்படுத்துவதாகவும், மற்றும் எதிர்கால ஆய்வாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இவ்வாய்வு அமைகின்றது.