Abstract:
உள்ளக குடும்பப் பிரச்சினைகள் குடும்பச் சிதைவுக்கும், விவாகரத்தின் அதிகரிப்புக்கும் வழி கோலியுள்ளது. இந்தவகையில் இப்பிரச்சினைகள் தொடர்பான ஆய்வு அவசியமாகின்றது. மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட முஸ்லிம் குடும்பங்களில் இடம்பெறும் உள்ளகப் பிரச்சினைகளையும், அவற்றின் காரணங்களையும் கண்டறிதலை இவ்வாய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. பண்பு ரீதியான ஆய்வு முறையிலான இக்கட்டுரை ஆய்வுப் பிரதேசத்தில் குடும்பப் பிரச்சினைகளைக் கையாளுகின்ற அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள், இஸ்லாமிய நிறுவனங்களின் அதிகாரிகள் எனும் வகையில் 22 பேர்களிடமிருந்து பெறப்பட்ட நேர்காணலின் பகுப்பாய்வினையும் மேலும் ஆவணங்களின் மீளாய்வினையும் மையப்படுத்தியது. விவாகரத்தின் அதிகரிப்புக்கு குடும்பத்துள்ளான பிரச்சினைகள் முக்கிய காரணிகளாக அமைகின்றது. தகாத உறவு, போதைப் பொருள் பாவனை போன்ற நடத்தை சார்ந்ததாகவும், தொழில் வாய்ப்பின்மை, கடன் சுமை போன்ற பொருளாதாரம் சார்ந்ததாகவும், தகுதிச் சண்டை, பாலியல் பலவீனம், தீராதநோய் போன்றனவாகவும் உள்ளகப் பிரச்சினைகளின் தன்மையும், வகையும் காணப்படுகின்றது என்பது இவ்வாய்வின் பிரதான கண்டறிதல்களாகும். சமூக ஆர்வளர்கள், அமைப்புக்கள் குடும்ப ஆற்றுப்படுத்தலில் ஈடுபடுவோர் இவ்வாய்வினைத் துணையாகக் கொள்ளலாம்.