Abstract:
பெரும்பாலான நாடுகளில் பாரிய அச்சுறுத்தலாக அசேதன பசளை பாவனை
ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மத்திய மாகாணத்தில், மாத்தளை
மாவட்டத்தில் அமைந்துள்ள தம்புள்ளை பிரதேச செயலகமானது அதிகளவில்
விவசாயத்தில் பயன்படு;த்தப்படும் அசேதன பசளை பாவனையின் தாக்கத்திற்கு
உட்பட்டுள்ளது. இவ்வாய்வானது விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அசேதன
பசளையானது எந்தளவு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதை ஆராய்வதையே
பிரதான நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் இப்பாதிப்புக்களை முகாமைத்துவம்
செய்வதற்கான வழிமுறைகளை கண்டறிதல் உப நோக்கமாக காணப்படுகின்றது.
இவ்வாய்வுக்கான தரவுகள் முதலாம் நிலை, இரண்டாம் நிலை தரவுகளாக பெறப்பட்டன.
அவதானிப்பு, வினாக்கொத்து (100), பொதுமக்கள் சந்திப்பு, இலக்கு குழு கலந்துரையாடல்
(5), போன்றன மூலம் முதலாம் நிலை தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஆய்வுப்பிரதேசத்தின் சுமார் 4677 குடும்பங்கள் விவசாய குடும்பங்களாக
காணப்படுகின்றன. எனவே மொத்தமாக இப்பிரதேசத்தில் இருந்து விவசாயிகள் எளிய
எழுமாற்று மாதிரி முறை மூலம் தெரிவுசெய்யப்பட்டு 100 வினாக்கொத்துக்கள்
வழங்கப்பட்டு ஆய்வுக்கான தரவுகள் திரட்டப்பட்டுள்ளன. மேலும் 5 இலக்கு
குழுக்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு கருத்துக்கள் பெறப்பட்டதோடு 200
இற்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் (விவசாயிகளுடன்) கலந்தரையாடப்பட்டு கருத்துக்கள்
பெறப்பட்டுள்ளன. இரண்டாம் நிலை தரவுகளாக ஆய்வுக்கட்டுரைகள், இணையம்,
தம்புள்ளை பிரதேச செயலக பிரிவு அறிக்கைகள் என்பன மூலம் பெறப்பட்டன.
சேகரிக்கப்பட்ட தரவுகள் அளவு சார் மற்றும் பண்புசார் பகுப்பாய்வுகளுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு Excel, Arc GIS போன்ற கணினி மென்பொருட்கள்
பயன்படுத்தப்பட்டு ஆய்வின் நோக்கம் அடையப்பட்டது. இப்பிரதேசத்து மக்களின் பிரதான
வாழ்வாதாரமாக விவசாயம் காணப்படுகின்றமை, விவசாயிகள் கூடிய விளைச்சலை
எதிர்பார்க்கின்றமை, கல்வியில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றமை போன்ற
காரணங்கள் அசேதன பசளை பாவனைக்கான காரணங்களாக இவ்வாய்வின் மூலம்
அடையாளம் காணப்பட்டன. மக்களுக்கு விழிப்புணர்வு திட்டங்களையும், சிறந்த கல்வி
வசதிகளையும், உதவிகளையும், மாற்று வாழ்வாதார முறைகளையும் அரசு மற்றும் அரச
சார்பற்ற நிறுவனங்களும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தம்புள்ளை பிரதேச
செயலகத்தில் செயற்கை பசளை பாவனையின் காரணமாக ஏற்படுகின்ற
பாதிப்புக்களுக்கான முகாமை நடவடிக்கைகளை இவ்வாய்வானது முன்மொழிவதால்
இனிவரும் காலத்தில் இத்தகைய பிரச்சினைகளை மையப்படுத்திய ஆய்வுகளுக்கு
அடிப்படையாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.