Abstract:
மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தின் கலேவெல பிரதேசம் அமைந்துள்ளது.
இப்பிரதேசத்தின் பௌதிக அமைப்பும், காலநிலையும் இடை பிரதேச குணாம்சங்களையே
பெரிதும் கொண்டுள்ளது. இவ்வாய்வின் பிரதான நோக்கம் ஆய்வுப் பிரதேசத்தின்
மழைவீழ்ச்சி தளம்பலினால் விவசாய நடவடிக்கைகளில் ஏற்படும் சவால்களையும்
மழைவீழ்ச்சி தளம்பலினால் விவசாயத்தில் ஏற்படும் தாக்கத்தையும்
அடையாளப்படுத்துவதாகும். முதலாம் நிலைத் தரவுகளாக வினாக்கொத்து வழங்கப்பட்டு
தரவுகள் பெறப்பட்டுள்ளதுடன் கலந்துரையாடல் மற்றும் அவதானம் மூலமாகவும் தரவுகள்
பெறப்பட்டன. அத்துடன் இரண்டாம் நிலைத்தரவு மூலாதாரங்களான வளிமண்டல
திணைக்கள வெளியீடுகள், விவசாயத் திணைக்கள அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரைகள்,
என்பனவற்றுடன் இணையத் தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பண்புசார்
மற்றும் அளவுசார் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதோடு, ஆய்வுப்பிரதேசத்தின்
மழைவீழ்ச்சித் தளம்பல் போக்கினை விளக்க நகரும் சராசரி முறை, எச்சத்திணிவு
வளைகோட்டு முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1965 - 2014 வரையிலாக
மழைவீழ்ச்சியைக் கொண்டு 5, 11, 21 நகரும் சராசரி வரையப்பட்டு ஆய்வு
மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேகரிக்கப்படவுள்ள தரவுகள் கணினி மென்பொருளான MS
Access, IBM SPSS Statistics 22 மூலமும், ARC 10 GIS மூலமும் பகுப்பாய்வு
செய்யப்பட்டுள்ளது. கலேவெல பிரதேசத்தின் மழைவீழ்ச்சி தளம்பல் போக்கினை
ஆராய்வதன் மூலம் நீண்ட கால குளிர் மற்றும் வரட்சி நிலைமை மாறி மாறி இடம்
பெற்றுள்ளதை அவதானிக்கலாம். மேலும் ஆய்வுப்பிரதேசத்தில் சில பருவங்களில் போது
குறுகிய காலத்தில் அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப் பெற்று வெள்ள அனர்த்தங்களும்
ஏற்படுத்தியுள்ளதுடன் மழைவீழ்ச்சி குறைவாகக் கிடைக்கப் பெற்றக் காலங்களில் அதிக
வறட்சி நிலைமை ஏற்பட்டு உள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளன.
இம்மழைவீழ்ச்சி தளம்பலினால் விவசாய நடவடிக்கையில் பல்வேறு சவால்களை
ஏற்படுத்தியுள்ளன.