Abstract:
இலங்கையின் மின் தேவையை அனல் மின்வலு கொண்டு பூர்த்தி செய்வதை
குறிக்கோளாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களில் பாரிய முதற்திட்டமே
நுரைச்சோலை அனல் மின்நிலையத் திட்டமாகும். இலங்கையின் வடமேல் மாகாணத்தில்
புத்தள மாவட்டத்தில் பாலாவி கல்பிட்டி பிரதான வீதியிலிருந்து சுமார் 100அ தூரத்தில்
கடற்கரையோரமாக 95 ஹெக்டயர் நிலப்பரப்பில் ஒவ்வொன்றும் 300 மெகாவற் திறனளவு
கொண்ட மூன்று உற்பத்தி நிலையங்களை அமைப்பது இத்திட்டத்தின் முழுமையான
வரையாகும். இம்மின் நிலையமானது பிரதான மூலப்பொருளான நிலக்கரியை மையமாகக்
கொண்டு இயங்கி வருகின்றது. இச்செயற்பாட்டால் ஏற்பட்டுவருகின்றசமூக பொருளாதார
சூழலியல் தாக்கங்களை அடையாளங் காண்பதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும்.
ஆய்வினை மேற்கொள்ள தேவையான தரவுகள் அனைத்தும் முதலாம் நிலைத்தரவுகளான
50 வினாக்கொத்துக்கள், நேரடி அவதானம், 10 நேர்காணல், 5 குழுக்கலந்துரையாடல்
மூலமும் இரண்டாம் நிலைத்தரவுகளான புள்ளிவிபரங்கள், ஆவணங்கள், சஞ்சிகைகள்,
அறிக்கைகள், பத்திரிகைகள் மற்றும் இணையம் மூலமும் பெற்றுக்கொள்ளப்பட்டன.
இத்தரவுகள் அனைத்தும் புவியியல் தகவல் தொகுதி (Arc GIS), MS Excel, SPSS போன்ற
மென்பொருட்கள் மூலம் அளவுசார் மற்றும் பண்புசார் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
ஆய்வின் மூலம் கிடைக்கப்பெற்ற சூழலியல் ரீதியான தாக்கங்களாக நீர் நிலம்
மாசடைதல், உயிர்ப்பல்வகைமை பாதிப்படைதல், சூழல் மாசடைதல், காலநிலை மாற்றம்
ஏற்படல் போன்றனவும் சமூக ரீதியான தாக்கங்களாக காணி இழப்புக்கள்,
இடப்பெயர்வுகள், சுகாதாரப் பாதிப்புக்கள், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைதல்
போன்றனவும் பொருளாதார ரீதியான தாக்கங்களாக விவசாயம், பயிர்ச்செய்கை மற்றும்
மீன்பிடி நடவடிக்கைகள் பாதிப்படைதல், உப்பளங்கள் பாதிப்படைதல், சுற்றுலாத்துறை
பாதிப்படைதல், நாட்டிற்கான செலவீனம் அதிகரித்தல் போன்றனவும் அடையாளம்
காணப்பட்டன. எனவே நுரைச்சோலை அனல் மின்நிலைய அபிவிருத்தியால் ஏற்பட்டு
வருகின்ற இவ்வாறான தாக்கங்களை குறைப்பதற்கு அரசு முன்வர வேண்டும்.
நிலக்கரியைக் கொண்டு இயங்கும் அனல் மின்நிலையத்திற்குப் பதிலாக மாற்று
வழிமுறைகளைக் கையாண்டு நாட்டிற்குத் தேவையான மின்னை உற்பத்தி செய்வதன்
மூலம் பாதிப்பற்ற மக்களையும் சூழலையும் கட்டியெழுப்ப முடிவதுடன் நாட்டில் நிலைத்து
நிற்கும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடியும்.