Abstract:
நீரானது மனிதனது அத்தியாவசியத் தேவையாகவும் மாற்றீடு செய்யமுடியாத ஒரு
வளமாகவும் காணப்படுகிறது. இந்த வளமானது பல்வேறு விதத்திலும் மாசடைந்து
கொண்டும் குறைந்து கொண்டும் வருகிறது. இன்று உலக மக்கள் எதிர்நோக்குகின்ற
பல்வேறுபட்ட சவால்களில் நீர்ப்பற்றாக்குறையும் ஒன்றாகும். நான்கு பக்கமும் கடலால்
சூழப்பட்ட வளமிக்க நாடான இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. அந்தவகையில்
இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் இரம்புக்கனை பிரதேச
செயலகத்திற்குட்பட்ட பத்தம்பிடிய பிரதேசத்தில் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறாத
காலங்களில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதன் காரணமாக இப்பிரதேச மக்கள்
பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே இப்பிரதேச மக்கள்
எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளையும் அதற்கான காரணங்களையும் அடையாளம்
காண்பதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். மேலும் அதனால் ஏற்படும் தாக்கங்களை
குறைப்பதற்காக மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகளை கண்டறிதல், நீரை
சேமிப்பதற்கான சிறந்த முகாமைத்துவ நடவடிக்கைகளை கண்டறிதல் என்பன உப
நோக்கங்களாக காணப்படுகின்றன. இவ்வாய்வுக்கான தரவுகள் முதலாம் நிலை,
இரண்டாம் நிலைத் தரவுகளாக பெறப்பட்டன. முதலாம் நிலைத் தரவு சேகரிப்பு
முறைகளான வினாக்கொத்துக்களை பகிர்ந்தளித்தல்(100), நேரடி அவதானிப்பு,
நேர்காணல், இலக்கு குழு கலந்துரையாடல் என்பவற்றின் மூலம் பெறப்பட்ட தரவுகளும்
இரண்டாம் நிலைத் தரவுகளான ஆய்வுக் கட்டுரைகள், பிரதேச செயலக அறிக்கைகள்,
சஞ்சிகைகள், இணையம் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட தரவுகள்
அளவுசார் மற்றும் பண்புசார் பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அப்பிரதேசத்தில்
மழைவீழ்ச்சி கிடைக்கப் பெறாத காலங்களில் ஏற்படும் நீர்ப்பற்றாக்குறையின் காரணமாக
எதிர் நோக்கும் பிரச்சினைகளாக குடிநீர்த் தட்டுப்பாடு, அன்றாட வீட்டுத்தேவைகளை
பூர்த்தி செய்ய முடியாமை, சுகாதாரம் பாதிக்கப்படல், பல்வேறு நோய்கள் ஏற்படுதல்
போன்ற சமூகப் பிரச்சினைகளும் மக்களின் நாளாந்த தொழில்கள் பாதிக்கப்படல்,
விவசாயம் பாதிக்கப்படல், கைத்தொழில்கள் பாதிக்கப்படல் போன்ற பொருளாதாரப்
பிரச்சினைகளும் அடையாளம் காணப்பட்டன. இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக
வேண்டி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல், ஆழமான கிணறுகளை
அமைத்துக் கொடுத்தல், மழைநீர் சேகரிப்பு முறைகளை ஏற்படுத்திக் கொடுத்தல், குழாய்
நீர் விநியோகத்தை பிரதேசத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்குதல், நீரைச்
சேமிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை கொண்டுவருதல் போன்ற நடவடிக்கைகளை
மேற்கொள்வது சிறப்பாக அமையும் என்பதே ஆய்வின் முடிவாகும்.