Abstract:
உலகில் மிக வேகமாக முன்னேறி வரும் துறைகளுள் சுற்றுலாத் துறையும் ஒன்றாகும்.
இந்த வகையில் ஒரு நாட்டின் பொருளாதார விருத்தியில் இதன் பங்களிப்பு
இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இன்று உலக மக்கள் எதிர்நோக்குகின்ற
பல்வேறுபட்ட சவால்களில் சுற்றுலாத்துறையின் விருத்தியினால் அப்பிரதேச மக்கள்
எதிர்நோக்குகின்ற சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் முக்கியமானவையாக
அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகையில் இலங்கையின் மத்திய மாகாணத்தில்
குளிர்க்கால நிலையைக் கொண்டமைந்த நுவரெலியாப் பிரதேசமானது ஆரம்ப காலம்
தொட்டு இன்று வரை சுற்றுலாத் துறையில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும்
பிரதேசமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளதுடன் விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக
வருமானத்தை ஈட்டித்தரும் தொழிலாகவும் இது காணப்படுகிறது. இதன் காரணமாக
இங்கு வாழும் மக்கள் பல்வேறு சூழல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து
வருகின்றனர். இந்த வகையில் இவ்வாய்வின் நோக்கமானது நுவரெலியா பிரதேச மக்கள்
சுற்றுலாத் துறையின் விருத்தியினால் எதிர்நோக்குகின்ற சூழல் மற்றும் சமூக
பிரச்சினைகளை அடையாளம் காண்பதும், ஆய்வுப் பிரதேசத்தில் சமூக, சூழல்
பாதிப்புகளை ஏற்படுத்துவதில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பினை இணங்காணுதல் மற்றும்
அதற்கான தீர்வுகளை முன்வைப்பதுமாகும். இந்த ஆய்வானது முதலாம் நிலை மற்றும்
இரண்டாம் நிலைத் தரவுகளை மையமாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
முதலாம் நிலைத் தரவுகளாக கள ஆய்வு, நேர்முகம் காணல், நேரடி அவதானிப்பு,
வினாக்கொத்துக்கள் என்பன பயன்படுத்தப்பட்டன. நுவரெலியா பிரதேசசெயலகப் பிரிவுக்கு
உட்பட்ட பகுதியில் எளிய எழுமாற்று முறை மூலம் 100 வினாக்கொத்துக்கள்
வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. இரண்டாம் நிலைத் தரவுகளாக நுவரெலியா
பிரதேச செயலகப் பிரிவின் அறிக்கைகள், சஞ்சிகைகள், புள்ளிவிபரத் திரட்டுக்கள்,
ஆய்வுக் கட்டுரைகள், இணையம், Google Earth என்பன மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டன.
இத்தரவுகள் பண்புசார் மற்றும் அளவுசார் பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டன. இதற்கு
SPSS, MS Excel, GIS போன்ற மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாய்வின்
மூலமாக கலாசார சீரழிவுகள், குற்றச்செயல்கள் அதிகரிப்பு, வாழ்க்கை முறைகள்
பாதிப்படைதல், மனித உரிமை மீறல்கள் அதிகரித்தல், சுகாதாரப் பிரச்சினைகள்,
நகராக்கம் மற்றும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு போன்ற சமூகரீதியான பிரச்சினைகளும்
அதிகரித்த திண்மக்கழிவுகளின் வெளியேற்றம் காரணமாக நீர் மாசடைதல்இ நிலம்
மாசடைதல், உயிர்ப்பல்வகைமை பாதிப்படைதல், இயற்கை அழகு பாதிப்படைதல்,
பாரம்பரிய தளங்கள் மாற்றமடைதல் போன்ற சூழல் ரீதியிலான பிரச்சினைகளும்
அடையாளம் காணப்பட்டன. எனவே இப்பிரதேச மக்கள் மத்தியில் விழிப்புணர்வை
ஏற்படுத்தி இவ்வாறான பிரச்சினைகளை இழிவளவாக்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பது
காலத்தின் தேவையாக உள்ளது.