Abstract:
உலகளாவிய ரீதியில் இலங்கை நாட்டை ‘பச்சைத்தங்கம்’ என அழைப்பதற்கு காரணம்
தேயிலை உற்பத்தி என்றால் மிகையாகாது. அவ்வகையில் இன்று சமூகத்தில் மக்கள் எதிர் நோக்குகின்ற பல்வேறுப்பட்ட சவால்களில் பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் சூழல், சமூகப் பொருளாதாரப் பாதிப்புக்கள் முக்கியமானவையாக இனங்காணப்பட்டுளள்ன. இலங்கையில் பதுளை மாவட்டத்தினை நிர்வாகத் தலைநகராகக் கொண்டதாக அப்புத்தளை பிரதேசமானது காணப்படுகின்றது. அவ்வகையில் இலங்கையில் தேசிய வருமாத்தினை ஈட்டித்தரும் தொழில்களில் ஒன்றாகப் பெருந்தோட்டத்துறை சிறப்புற்று காணப்படுகின்றது. அப்புத்தளைப் பிரதேசத்தில் தேயிலைச் செய்கையானது பௌதீக, மானிடக்காரணிகளால் வெகுவாக அழிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே அருகிவரும் தேயிலைச் செய்கையினால் பெருந்தோட்ட மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். இவ்வாய்வின் நோக்கமானது அப்புத்தளை பிரதேச பெருந்தோட்ட மக்களின் சூழல், சமூகப் பொருளாதார பிரச்சினைகளை் அடையாளம் காண்பதும் அதற்கான தீர்வுகளை முன்வைப்பதுமாகும். இவ்வாய்வானது முதலாம்நிலை மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகளை மையமாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. முதலாம் நிலைத்தரவுகளாக, களஆய்வு, நேர்முகம் காணல், நேரடி அவதானிப்பு, வினாக்கொத்துக்கள் என்பன பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக அப்புத்தளை பிரதேச செயலகத்திற்குற்பட்ட தேயிலை பெருந்தோட்ட மக்களுக்கு எளிய எழுமாற்று முறை மூலமாக 100 வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. இரண்டாம்நிலைத் தரவுகளாக பிரதேச செயலகப்பிரிவின் அறிக்கைகள், சஞ்சிகைகள், புள்ளி விபரத்திரட்டுக்கள், ஆய்வுக்கட்டுரைகள், இணையம் என்பன பயன்படுத்தப்பட்டன. இத்தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்காக Ms Excel, GIS, SPSS போன்ற மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாய்வின் மூலம் அடையாளங்கண்ட சூழல் பிரச்சினை என தேயிலைச்செய்கையின் அழிப்பு காரணமாக சிறியளவில் மண்சரிவு இடம்பெறல் மற்றும் சமூகப்பாதிப்புக்களாக சிறந்த வீட்டுவசதி இன்மை, தோட்டங்களுக்கிடையிலான முரண்பாடு, கல்விவசதிகளின்மை, வேறு தோட்டங்களுக்கு இடம்பெயர்தல், தொழில் இன்மையால் மன உளைச்சல் ஏற்படல் போன்றனவும் பொருளாதாரப் பிரச்சினைகளாக ஒரு நாளுக்கான வருமானம் போதாமை, வறுமைநிலை, போதியளவு நிவாரணம் கிடைக்காமை, போதிய முதலீடு இன்மை போன்றனவும் அடையாளங்காணப்பட்டன. எனவே இவ்வாறான பிரச்சினைகளைத் தீரப்பதற்காக விழப்புணர்வுத் திட்டங்களையும், பெருந்தோட்ட முகாமைத்துவத்தையும் அரசு மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதன்ம மூலமே நாட்டில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும்.