Abstract:
உயிர்ப்பல்லினத் தன்மை (Biodiversity) எனும் கருத்தாடல் பல்வேறு துறைகளில் பிரயோகிக்கப்பட்டு வருவதோடு அது தொடர்பிலான ஆய்வுகளில் வளர்முக நாடுகளின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாக உள்ளது. உயிர்ப் பல்லினத் தன்மை ஒரு நாட்டின் கலாசாரத்தின் வெளிப்பாடாக இருப்பதோடு அது சூழலிற்கும் மனித, சமூக, மத, கலாசார, பொருளாதார, அரசியல் துறைகளில் முக்கிய பங்கினை வகித்து வருகின்றது. எடுத்துக்காட்டாக இலங்கையில் மிருகங்களின் எண்ணற்ற வனப்பு இதனைக் காட்டுகின்றது. எனினும் காலத்தின் வேகத்தில் மானிட ஆக்கிரமிப்பினாலும் ஏனைய நடவடிக்கைகளினாலும் இலங்கைக் காடுகளில் மிருகங்களின் இருப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாகக் காணப்பட இன்னும் சில பகுதிகளில் காணப்படும் வன விலங்குகள் மானிட சமுதாயத்தின் இருப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. இலங்கையின் பல பிரதேசங்களில் வனவிலங்குகளின் அச்சுறுத்தல் இடம் பெற்று வருகின்றன. குறிப்பாக இலங்கையில் முக்கியத்துவமளிக்கப்படும் மிருகங்களான சிறுத்தை, யானை போன்ற விலங்குகளினாலே அதிகப் பாதிப்புக்கள் இடம் பெறுகின்றன. கலாசார முக்கியத்துவம் பெற்ற மிருகங்களினால் மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலிலிருந்து உயிர்ப்பல்வகைமை என்ற அடிப்படையில் இரு சமூகத்தின் நிலைப்பினைப் பாதுகாக்க வேண்டிய தேவையின் மத்தியில் மானிட சமூகத்திற்கு பாரிய சமூகப் பொருளாதாரப் பாதிப்பினைத் தோற்றுவித்துள்ளது. இதற்கமைய இறக்காம பிரதேச செயலகப் பிரிவினை ஆய்வுப் பிரதேசதமாகக் கொண்டு இங்கு காட்டு யானைகளின் ஊடுருவலினால் ஏற்படுத்தப்படுகின்ற சமூகப் பொருளாதாரத் தாக்கத்தினைக் கண்டறிவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனை மேற்கொண்டு செயற்படுவதற்கு இவற்றினால் ஏற்படும் பாதிப்புக்களினை அடையாளம் காணுவதினையும் இதற்காக அரசினால் மேற்கொள்ளப்படும் நஷ்டஈடு மற்றும் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வின் பொருத்தப்பாட்டினையும் மதிப்பீடு செய்வதனூடாக மேலும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாய்வுக்கு முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு அளவு சார் மற்றும் பண்பு சார் பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் கணினித் தொழிநுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வின் மூலமாக உயிரிழப்புக்கள் ஏற்படுத்தப்படல், உடலியல் ரீதியான காயங்கள் ஏற்படுத்தப்படல், குடும்பப் பின்னடைவுகள், பயிர் சேதம் ஏற்படுத்தப்படல், சமூகப் பின்னடைவுகள் ஏற்படுத்தப்படுதல், மரங்கள் அழிக்கப்படுதல் போன்ற சமூகப் பொருளாதாரப் பாதிப்புக்கள் இனங்காணப்பட்டுள்ளன. அத்தோடு இவ்வாய்வின் மூலம் காட்டு யானைகளின் ஊடுருவலால் ஏற்படுத்தப்படுகின்ற சமூக பொருளாதாரப் பாதிப்புக்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகளும் வன விலங்குகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் பரிந்துரைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.