Abstract:
ஒரு நாட்டில் இடம் பெறுகின்ற யுத்தமானது யுத்தகாலத்தின் போதும் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியிலும் அந்நாட்டு மக்களின் அரசியல், பொருளாதார, சமூக நல்லிணக்கத்திலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துவனவாக காணப்படுகின்றன. அதே போன்றுதான் இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளிற்கும் - இலங்கை அரசிற்கும் இடையில் இடம்பெற்ற இன மோதலானது பல்வேறு இழப்புக்களையும் வன்முறைகளையும் தாக்கங்களையும் இலங்கையில் வாழும் பல்லின சமூக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இவ் இனமோதலின் முக்கியமான நிகழ்வு இலங்கையில் சிறுபான்மையினரில் ஒரு கணிசமான பகுதியினரான இஸ்லாமியர்கள் மத்தியில் ஆறாத வடுவினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழீழ விடுதலைப்புலிகளின் தனி ஈழ போராட்டத்தின் போது 1990 களில் வடக்கு – கிழக்கு முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை ஆகும். இவர்கள் தமது சொந்த குடியிருப்புக்கள், உடமைகள், சொத்துக்கள, பொருளாதாரம் என்பவற்றினை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அதிலும் குறிப்பாக வடக்கில் முல்லைத்தீவு மாவட்ட மொத்த சனத்தொகையில் 5% மாக காணப்பட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு அவர்கள் சுமார் 20 வருட கால அகதி வாழ்வினை பெரும் சிரமங்களிற்கு மத்தியில் சிலாபம், புத்தளம், அநுராதபுரம் போன்ற மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு வடக்கில் மீள்குடியேற்றம் இடம்பெற்று வருகின்ற சூழ்நிலையில் முல்லைத்தீவு பகுதியிலிருநது; பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் எவ்வாறான இடர் பாடுகளை சந்திக்கின்றார்கள் மேலும் நீண்ட காலத்தின் பின்னர் மீள் குடியேற்றப்பட்டதனால் தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்களிடையே சமாதான மற்றும் நல்லிணக்கத்தன்மைகள் காணப்படுகின்றதா? அத்துடன் மீண்டும் இப்பிரதேசத்தில் மீள்குடியேறுவதற்க்கு மக்கள் முன்வருகின்றார்களா? இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதில் அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்களின் செயற்பாடு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது போன்ற பிரச்சினைகளை ஆராய்வதாக இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கான முதலாம் நிலைத்தரவுகள் நேர்காணல், வினாக்கொத்து, இலக்க குழு கலந்துரையாடல்கள் மூலமும் இரண்டாம் நிலைத்தரவுகள் பத்திரிகைகள்; நூல்கள், இணையத்தளங்கள் ஊடாக திரட்டப்பட்டன. மேற்படி பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வினூடாக சொந்த நிலங்களில் மீள் குடியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் பிரதானமாக அரசியல், பொருளாதார, கலாசார ரீதியான பல சாவல்களை எதிா் கொள்வதினை இனங்காணப்பட்டது.