Abstract:
மாணவர்களில் பல்வேறு ஆளுமைப் பண்புடையவர்களாக உள்ள அதேவேளை அவர்கள் தனியாள் வேறுபாடுகளை உடையவர்களாகவும் உள்ளனர். அவர்கள் பல்வேறு சூழலிலிருந்து வேறுபட்ட குடும்பப் பின்னணியிலிருந்து பாடசாலைக்கு வருகின்றார்கள் அவர்கள் வகுப்பறையில் பல்வேறு நடத்தைக் கோலங்களை வெளிப்படுத்துவதை அவதானிக்கலாம். அவர்களுடைய வயது வேறுபாட்டுக்கு ஏற்ப அவர்களின் நடத்தையின் போக்கிலும் மாற்றங்கள் காணப்படுவதை அவதானிக்கலாம். குறிப்பாக இடைநிலை வகுப்பு மாணவர்கள் பதின்ம வயதினராகவும் (Teenage) உள்ளமையால் அவர்கள் பிறரது கவனத்தைத் தம்பக்கம் ஈர்ப்பதில் அக்கறை காட்டுவர். உளவியலாளர்கள் இவ்வயதுப் பிரிவினர் பற்றித் தனிக்கவனம் செலுத்தியுள்ளனர். 'சமூக நிலவரங்கள் மற்றும் குடும்ப நிலவரங்கள் ஆகியனவே மாணவரின் பிறழ்வு நடத்தைகளுக்கு அடிப்படைக் காரணிகள் ஆகின்றன. இக்காரணிகளே கற்றலில் மாணவர்கள் முழுமையாக ஈடுபடமுடியாத தவிப்பு நிலையை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் மாணவர்கள் பிறழ்வு நடத்தைகளைக் காட்டும்போது அவற்றை ஆசிரியர்கள் வினைத்திறனோடு முகாமைசெய்து வழிப்படுத்த வேண்டிய தேவை அவசியமாகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வடமராட்சிக் கல்வி வலயத்தின் கரவெட்டி கோட்ட பாடசாலைகளில் இடைநிலை வகுப்புக்களில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை அடிப்படையாகக் கொண்டு வகுப்பறையில் மாணவர்களின் பிறழ் நடத்தைகளை முகாமை செய்தல் என்னும் தலைப்பின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. வகுப்பறை முகாமைத்துவச் செயற்பாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அவர்களது பிறழ் நடத்தைகளை முகாமை செய்தலும் அமைகின்றது. கரவெட்டி கல்விக் கோட்டத்தில் 31 பாடசாலைகள் இயங்குகின்றன. அவற்றில் 16 பாடசாலைகள் இடைநிலைப் பாடசாலைகளாக உள்ளன. இப்பாடசாலைகளில் தரம் 9 – 11 வரையான இடைநிலை வகுப்புக்களில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை அடிப்படையாகக் கொண்டே ஆய்வு முன்னெடுக்கப்படுகின்றது. உரத்துக் கத்துதல், கற்பித்துக் கொண்டிருக்கும்போது கதைத்தல், பொருட்களை வீசுதல், கரும்பலகைகளில் வேண்டாத விடயங்களை எழுதுதல், தேவையற்றுக் கதைத்தல், நேரம் தாழ்த்தி வகுப்பறைக்கு வருதல், கற்றல் மேலதிக செயற்பாடுகளை வீடுகளில் நிறைவேற்றாது வருதல், வன் நடத்தைகள், பொய் உரைத்தல், எதிர்ப்பாலாரோடு முரண்படுதல், பிறரது பொருட்களை எடுத்தல், பாடசாலைச் சொத்துக்களை நாசம்செய்தல், தூங்குதல் போன்ற பலவகையான நடத்தைப் பிறழ்வுகளை அவர்கள் வகுப்பறைகளில் வெளிக்காட்டுகின்றனர். இப்பிரச்சினைகளை முகாமை செய்வதில் ஆசிரியர்கள் பல்வேறு இடர்பாடுகளை எதிா் கொள்கின்றனர். குடும்பம், சமூகம், பாடசாலை, மாணவர் சார்ந்து அவர்களது பிறழ்நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதே இங்கு ஆய்வுப் பிரச்சினையாக உள்ளது. பிறழ்நடத்தைக்கான பின்னணிகள் பிறழ் நடத்தையின் வெளிப்பாடுகள், பிறழ் நடத்தைகளை முகாமை செய்வதில் ஆசிரியர் எதிா் கொள்ளும் சவால்கள், அச்சவால்களை வெற்றி கொள்வதற்கு அவர்கள் கையாளக்கூடிய நுட்பங்கள் பற்றி இந்த ஆய்வில் நோக்கப்படுகின்றது.