Abstract:
இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினைக்கு மொழிப்பிரச்சினையே அடிப்படைக்
காரணமாகியது. மொழி என்பது ஒரு இனத்தில் தோன்றிய தொடர்பாடல் கூறாகும். ஒரு
மொழி ஒரு இனத்தை பிரதிபலிக்கும். அண்மைக் காலமாக சிங்கள மக்கள் தமிழ் மொழி
பயில்வதில் ஆர்வம் காட்டி வருவதைக் காணலாம். ஆனால் அவர்கள் தமிழ் மொழியைப்
பயிலும் போது பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்கின்றனர். அவற்றை ஆராய்வதாகவே
இவ்வாய்வு அமைந்துள்ளது. சிங்கள மக்கள் தமிழ் மொழி பயில்வதில் காணப்படுகின்ற
சிக்கல்களை வெளிக்கொண்டு வருவதும் அவற்றை தீர்ப்பதற்கான சில பரிந்துரைகளை
முன்வைப்பதும் இவ்வாய்வின் நோக்கங்களாகும். சிங்கள மக்கள் தமிழ் மொழி
பயில்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். சிங்கள மக்கள் தமிழ்
மொழியை இரண்டாம் மொழியாகப் பயில்வதில் பல்வேறு சிக்கல்களை
எதிர்நோக்குகின்றனர். அவற்றினை அடையாளம் கண்டு அவற்றிற்கான தீர்வுகளை
முன்வைப்பது காலத்தின் தேவையாகும். இவ்வாய்வில் முதல்நிலை ஆதாரங்கள்,
துணைநிலை ஆதாரங்கள் முதலியன பயன்படுத்தப்பட்டுள்ளன.
நேர்காணல்கள்,வினாக்கொத்துகள் மூலம் பெறப்பட்ட தகவல்கள் முதல்நிலை
ஆதாரங்களாகவும் நூல்கள், அறிக்கைகள், இணையத்தளம் முதலியவற்றிலிருந்து
பெறப்பட்ட தகவல்கள் துணைநிலை ஆதாரங்களாகவும் இவ்வாய்வில்
பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வுக்கான முதல்நிலை ஆதாரங்கள், இரண்டாம்
மொழியாக தமிழ்மொழியைக் கற்கும் பேராதனை, கொழும்பு,
தென்கிழக்குப்பல்கலைக்கழக சிங்கள மாணவர்களிடமும் பல்வேறு அரச நிறுவனங்களில்
தொழில் புரியும், இரண்டாம் மொழியாகத் தமிழ் மொழியைப் பயிலும் பல்வேறு
மட்டங்களைச் சேர்ந்த ஊழியர்களிடமும் வினாக்கொத்துக்களை வழங்கியும்
கலந்துரையாடல்களை மேற்கொண்டும் பெறப்பட்டுள்ளன. இவ்வாய்வில் மொழியியல்,
விவரண அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிங்கள மாணவர்களின் தாய் மொழி
சிங்கள மொழியாகும். சிங்கள மொழியானது அமைப்பியல் ரீதியாக சில சில இடங்களில்
தமிழ் மொழியுடன் ஒத்துச் சென்றாலும் பெரும்பாலான இடங்களில் வேறுபடுகின்றது.
அவ்வகையில் தமது தாய் மொழியான சிங்கள மொழியின் அமைப்பின்
செல்வாக்கிற்குட்பட்ட சிங்கள மாணவர்கள் இரண்டாம் மொழியாக தமிழ் மொழியை
கற்கும் போது மொழியியல் ரீதியாக பல சிக்கல்களை எதிர் கொள்கின்றனர்.