Abstract:
”பெண்‟ பற்றிய கருத்துநிலை மானிடப் பிறப்போடு உருவானதொன்றாகும். ஆனால், மனித
வாழ்விலும் சமூக வாழ்விலும் அவள் பெற்று வருகின்ற இடம் பெண் பற்றிய விவாதங்களை
வரலாற்றில் ஏற்படுத்திற்று. இன்று பெண் பற்றிப் பேசுவது ஒரு இஸமாகவும் அதனது
உள்ளார்ந்த விடயங்களை அலசுவது, அது பற்றிய அரசியலாகவும் மாறிவிட்டது. ஈழத்து
முஸ்லிம் பெண் கவிதைகள் என்று எழுதவருகிறபோது அதில் பல்வேறு விதமான
பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. முதலில் „முஸ்லிம் பெண்‟ என்பதனாலே
இந்தப் பிரச்சினை அடிப்படையாகிறது. சமகால இலக்கியத்தில் குறிப்பாகக் கவிதைகளில்
வரும் படிமங்களும் சித்திரிப்புக்களும் மிகக் கவர்ச்சிகரமானவையாகவும் பிரக்ஞை
பூர்வமானவையாகவும் அமைந்து விடுகின்றது. பெண் தன்னை முழுமையாகப் பேச
வருகின்றபோது, பெண் பற்றிய உணர்வு நிலைகளோடு மாத்திரம் நின்று விடாது சமகால
இலக்கியத்தின் உயர்நிலை சித்திரிப்புக்குள்ளும் அமிழ்ந்து கொண்டே அதனை
வெளிப்படுத்துகிறபோது அதற்கு இருக்கிற விமர்சனங்கள் மிக அழுத்தமுடையனவாக மாறி
விடுகின்றன. இலங்கையின் இன முரண்பாட்டுச் சூழ்நிலையும், இன முரண்பாட்டுக்குப்
பின்னரான சூழ்நிலையும் கூட "பெண்‟ பற்றிய பிரச்சினைகளைப் புதிய தளத்துக்கு
நகர்த்தியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணினது உணர்வுகள் இந்தச் சூழ்நிலையின்
"பிரதி‟களாகவும் அமைந்து விடுகின்றன. பெண் இருப்பு, அதனோடு அவள் சார்ந்த சமூக
இருப்பு முதலானவையும் கவிதைகளில் வெளிப்படத் தொடங்கின. 1980களிலே பெண்கள்
தமது சமூக இருப்புக் குறித்தும் பணிகள் குறித்தும் அதிகம் விழிப்புணர்வுள்ளவர்களாகச்
செயற்பட்டனர். அதன் பிரதான உபாயமாக அவர்கள் இலக்கியத்தைக் கையாளத்
தொடங்கினர். அவ்வகையிலே தமிழ் பேசும் ஈழத்துப் பெண் கவிஞர்கள் எழுதிய „சொல்லாத
சேதிகள்‟ என்ற கவிதைத் தொகுதி 1986இல் வெளியானது. ஈழத்துத் தமிழ் பேசும்
சமூகத்துள் முஸ்லிம்களும் உள்ளடங்குவர். அவர்கள் தமிழ் மொழியைப்
பேசுபவர்களாயினும் பண்பாடுஇ அரசியல்இ சமயம் என்றவகையில் வேறுபட்ட ஒரு இனக்
குழுவினராகவே அடையாளப்படுத்தப்பட்டனர். ஈழத்தில் 1980களில் நிலவிய இன முரண்பாடு
இந்த அடையாளத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்தது. பொதுவாக ஈழத்துப் பெண்களிடம்
ஏற்பட்ட விழிப்புணர்ச்சி அதே சமகாலத்தில் முஸ்லிம் பெண்களிடத்தில் ஏற்பட்டதாகக் கூற
முடியாது. முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதற்கே ஒரு காலத்தில் தடை இருந்தது. சமூக
ஈடுபாடுள்ளவர்களாகச் செயற்பட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவள்
வீட்டுக்குரியவளாகவும் வீட்டு நிர்வாகத்தை நடத்துவதற்குரியவளாகவுமே கணிக்கப்பட்டாள்.
சித்திலெப்பையின் "அசன்பே‟ கதையில் வரும் பாளினாவே முஸ்லிம் மறுமலர்ச்சியின்
அடையாளமாவாள். பாளினாவைப் போன்ற முஸ்லிம் பாத்திரத்தைக் காண இச் சமூகத்தில்
100 வருடம் எடுத்திருக்கிறது. ஈழத்துத் தமிழிலக்கிய உலகில் முஸ்லிம் பெண்
கவிஞர்களின் கவிதைகளையும் அவர்களது கவிதைகளின் பேசுபொருளையும் கண்டறிதலும்
வெளிக்கொணர்தலையும் ஆய்வு நோக்கமாகக் கொண்ட இவ்வாய்வில் முதலாம் நிலை,
இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்படவுள்ளன. குறிப்பிட்ட பெண் கவிஞர்களின்
கவிதைத் தொகுதிகள் முதலாம் நிலைத் தரவுகளாகவும் இவ்வாய்வு தொடர்பான ஏனைய
கட்டுரைகள், விமர்சனங்கள் அடங்கிய நூல்களும் சஞ்சிகைகளும் பத்திரிகைகளும்
இரண்டாம் நிலைத் தரவுகளாகவும் பயன்படுத்தப்படவுள்ளன. சமூகவியல், விளக்குமுறை,
ஒப்பீட்டு, விபரண ஆய்வு முறையியல் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படும்.