Abstract:
ஒரு மொழியின் பெயர்ச்சொற் றொகுதியில் உறவுப் பெயர்கள் இன்றியமையாத
கூறாக அமைகின்றன. உறவுப் பெயர்கள் அவ்வம் மொழியைப் பேசும் சமூகத்தின்
பண்பாட்டுக்கேற்ப சில தனித்துவங்களைக் கொண்டனவாயும் அமையும்.
உதாரணமாகத் தமிழில் உள்ளது போல் ஆங்கிலத்தில் மூத்த, இளைய
(ஆண்/ பெண்) சகோதரர்களைக் குறிக்கும் உறவுப் பெயர்கள் இல்லை.
அவ்வகையில் உறவுப் பெயர்கள் ஒரு மொழிச் சமூகத்தின் பண்பாட்டு
வெளிப்பாடு என்று கொள்ளலாம். தமிழில் உறவுப் பெயர்கள் தொடர்பான
ஆராய்ச்சி தொல்காப்பியர் காலம் முதலாகவே இடம்பெற்று வருகிறது. வரலாற்று
ரீதியில் நோக்கும்போது தமிழில் ஒரு உறவு குறித்து ஒரு காலத்தில் வழங்கிய
பெயர் பிற்காலத்தில் வேறு உறவு குறித்ததாகப் பொருள் மாற்றம்
பெற்றுள்ளமையையும் அவதானிக்க முடியும். ஆகையால் உறவுப் பெயர்
தொடர்பான ஆராய்ச்சி வரலாற்று நோக்கிலும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
தமிழ் வழங்கும் பிராந்தியங்களை எடுத்து நோக்கும்போது குறித்த ஒரு
உறவுமுறை குறித்து ஒரு பிரதேசத்தில் ஒரு பெயரும் வேறொரு பிரதேசத்தில்
பிறிதொரு பெயருமாக வேறுபட்டமைவதையும் காணமுடிகிறது. சமூக ரீதியில்
நோக்கும்போது தமிழ் மக்களுக்குள் பிராமண சமூகத்தவர், முஸ்லிம் சமூகத்தவர்
முதலாக வேறு வேறு சமூகத்தவர் மத்தியில் ஒரு உறவு முறை குறித்து வேறு
வேறு பெயர்கள் வழங்கக் காணலாம். அவற்றை ஒப்பியல் அடிப்படையில் ஆராய
வேண்டியுள்ளது. மொழி அமைப்பு ரீதியில் தன்மை, முன்னிலை, படர்க்கை
நிலைகளில் சில உறவுமுறைப் பெயர்கள் வேறுபட்டமையக் காணலாம்.
உறவுமுறைப் பெயர்கள் பால் அடிப்படையிலும் தெளிவான வேறுபாடுகளைக்
கொண்டுள்ளன. அவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை அமைப்பியல் ரீதியில்
அணுக வேண்டியுள்ளது. தமிழில் வழங்கும் உறவுப் பெயர்கள் தொடர்பாக இந்த
ஆய்வானது அமைப்பியல் ரீதியில் பல கோணங்களில் ஆராய்கிறது.