Abstract:
மணிரெத்தினம் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான ஓர் இயக்குனர். இவரது சிறந்த
கதை அமைப்பு மற்றும் கதைத் தெரிவு என்பன இவருக்கு இந்திய சினிமாவில் தனி
இடத்தினை அமைத்துக் கொடுத்துள்ளது. கடினமாக காணப்பட்டதினை களத்தில் இறங்கி
சாதாரணமாக மாற்றி திரையில் வலம்வரச் செய்யும் விதமாகத் திரைப்படங்களினை
அமைப்பதே இயக்குனர் மணிரெத்தினத்தினை பல விருதுகளைப் பெற வழிவகுக்கின்றது.
இயக்குனர் மணிரெத்தினம் பார்வை ஏனைய இயக்குனரின் பார்வையினைவிட
வேறுபட்டதாகவும், புதுமையானதாகவும் காணப்படுகின்றது. இவரின் திரைப்படங்கள்
வெற்றிப்படங்களாகவும், சாதனை புரியும் திரைப்படங்களாகவும் அமைவதற்கு
அடிப்படையாக அமைவது அவரின் அடிக்கருத்துக்களாகும். ஓர் அடிக்கருத்தினை எடுத்து
அதற்குக் களம் அமைத்து, அதற்கு உயிர் ஊட்டி இசையில் நனைத்துப்
பார்வையாளர்களுக்கு ஓர் சிறந்த கலையாகத் திரைப்படத்தை வழங்குபவர்
மணிரெத்தினம். இவர் தனது திரைப்படங்களினை உருவாக்குவதற்கு எத்தகைய
அடிக்கருத்துக்களை எடுக்கின்றார்? எந்தப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு
அடிக்கருத்துக்களை அமைக்கின்றார்? அடிக்கருத்துக்கள் தாங்கி வரும் விடயம் என்ன?
என்ற கேள்விகளுக்கு விடை காண்பதே இந்த ஆய்வின் நோக்கமாக அமைந்துள்ளது.
இந்த ஆய்வின் எல்லையாக மணிரெத்தினத்தின் அனைத்துத் தமிழ்த் திரைப்படங்களும்
உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒர் திரைப்படத்தின் தலைமைக் கருத்தே அதன் அடிக்கருத்தாக
அமைகின்றது. அதன் அடிப்படையில் திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. கதை
அமைப்பும், அதன் அடிப்படையிலே எழுதப்படுகின்றது. அந்தவகையில் இந்த ஆய்வானது
ஒப்பீட்டாய்வு, பகுப்பாய்வு, விபரண ஆய்வு முறையியல்களைப் பயன்படுத்தி
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயக்குனர் மணிரெத்தினத்தின் திரைப்படங்களின்
அடிக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வின்
மூலாதாரமாக மணிரெத்தினத்தின் தயாரிப்பில் உருவான பத்தொன்பது தமிழ்த்
திரைப்படங்கள் மட்டும் எடுத்தாளப்பட்டுள்ளன. இரண்டாம்நிலைத் தரவுகளாக இந்த
ஆய்வுப் பொருண்மையோடு தொடர்புடையதான நூல்கள், ஆய்வு நூல்கள், கட்டுரைகள்,
ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் சஞ்சிகைகளும் அமைகின்றன. இந்த ஆய்வினூடாகத் தமிழ்
சினிமாவின் அடிக்கருத்துக்களை அறிந்து கொள்ள முடிவதோடு அது செல்ல வேண்டிய
திசை வெளியையும் அறிந்து கொள்ள முடியும் எனலாம். இந்த ஆய்வின் கருதுகோளாக
இயக்குனரின் திரைப்படங்கள் வெற்றிபெற அடிக்கருத்துக்களே காரணமாக அமைகின்றன.
எனவே இது பற்றி ஆராய வேண்டியது அவசியமானது. இயக்குனர் மணிரெத்தினம் நட்பு,
காதல், அரசியல் குடும்பம் மற்றும் சமுதாயம் போன்ற அடிக்கருத்திலிருந்தே
திரைப்படங்களை அமைக்கிறார். அடிக்கருத்துக்களே சிறந்த கதைக்களங்கள் உருவாகக்
காரணங்களாக உள்ளன, ஒர் திரைப்படத்தின் தலைமைக் கருத்தே அதன் அடிக்கருத்தாக
அமைகின்றது. தமிழ்த் திரைப்பட இயக்குனர் மணிரெத்தினம் திரைப்படங்களின்
அடிக்கருத்துக்கள் குறித்து அதிக முக்கியத்துவம் செலுத்துகிறார் போன்றன இந்த
ஆய்வின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.