Abstract:
தமிழ் இலக்கிய பரப்பில் பதினெண் சித்தர் பாடல்களுக்கு தனித்துவமான இடமுண்டு.
இப்பாடல்களானவை சித்தவைத்திய முறையினைத் தெளிவாக விளக்கி நிற்பதோடு, இன,
மத வேறுபாடுகளுக்கப்பாற்பட்ட நிலையில் நின்று மனிதகுலம் அனைத்தினையும் ஒன்று
சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. உயிர்களிடம் அன்பு செலுத்துதல், தீண்டாமை,
பெண் நலன் என்பனவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து அக்கருத்துக்களை
எடுத்தியம்பும் வகையில், சாதிபிரிவினைத் தீமூட்டுவோம், சாதிபேதமில்லை, சாத்திரம்
இல்லையடி, நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம், என சாதிப்பாகுபாட்டிற்கெதிராகவும்,
பெண் நலன் பேணும் வகையில், மாதராய் வந்து அமுதம் தந்தால், பெண்ணும்
இல்லாமல் ஆணும் இல்லை என ஆண், பெண் சமத்துவத்தினையும் முன்வைத்து
சமூகத்தினை ஒருங்கிணைக்கும் முயற்சியினை மேற்கொள்ளும் வகையில் அமையப்
பெற்றுள்ளன. பொதுவாக, சித்தர் பாடல்களானவை மனிதகுலத்தினை சமநிலையில்
நோக்கும் வகையிலும், மானிடப்பிறவியின் பெருமையினைப் போற்றும் வகையிலும்
அமையப் பெற்றுள்ளன. இதற்கு சிவவாக்கியர், பட்டினத்தார், உலகாயச்சித்தர்,
பாம்பாட்டிச் சித்தர், கடுவெளிச்சித்தர் போன்றவர்களது பாடல்களை குறிப்பிடலாம்.
இவ்வாய்வின் நோக்கம் பதினெண் சித்தர் பாடல்களாக வெளிப்படும் சமூக நல்லிணக்கச்
சிந்தனைகளை இனங்கண்டு, அவற்றின் முக்கியத்துவத்தினை சமூகத்திற்கு கொண்டு
செல்லலாகும். பதினெண் சித்தர் பாடல்கள் சமயம், தத்துவம், அறிவியல் என்பனவற்றுடன்
சமூகநல்லிணக்கம் பற்றிய எண்ணக்கருக்களையும் முன்வைத்துள்ளன என்பதனை ஆய்வுப்
பிரச்சினையாகக் கொண்டு இவ்வாய்வு நகர்கிறது. சமூகநல்லிணக்கம் பேசுவனவற்றுள்
சித்தர் பாடல்களுக்கு தனித்துவமான இடமுண்டு என்ற கருதுகோளின்அடிப்படையில்
இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதினெண் சித்தர் பாடல்களை முதலாம்
நிலைத்தரவாகவும், ஏனைய நூல்கள், கட்டுரைகள், சஞ்சிகைகள் என்பனவற்றினை
இரண்டாம் நிலைத்தரவாகவும், சமூகவியல், ஒப்பீட்டு, விபரண ஆய்வு முறைமைகளும்
இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன.