Abstract:
இந்த ஆய்வானது கவிதை என்னும் கலைவடிவம் எவ்வாறு கூட்டு மனக்காயங்களை -
உளசமூக நெருக்கீடுகளைக் கடந்து செல்வதற்கான கலையூடகமாக தொழிற்படுகின்றது
என்பது பற்றி ஆராய்கின்றது. இதற்கு அகிலனின் "பதுங்குகுழி நாட்கள்‟, "சரமகவிகள்‟
மற்றும் நிலாந்தனின் "யுகபுராணம்‟ ஆகிய கவிதைப் பிரதிகள் அடிப்படையாகக்
கொள்ளப்படுகின்றன. கவிதை அடிப்படையில் தனித்துவமான மன உணர்வெளிச்சிகளின்
வெளிப்பாடாகவே அமையும் கலைவடிவமாதலால் தனிமனித மற்றும் சமூக உள
நெருக்கீடுகளையும், கூட்டு மனக்காயங்களையும், துயரங்களையும் வெளிப்படுத்தவும்,
பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பான கலை ஊடகமாகவும் அவற்றைக் கடந்து
செல்வதற்கான வழியாகவும் அமைந்து விடுகின்றது. ஈழத்தில் யுத்தம் ஏற்படுத்திய
உளநெருக்கீடு மற்றும் கொதிநிலைகளிலிருந்து மேற்கிளம்பிய மேற்படி கவிதை
தொகுதிகளை, உளவியல் மற்றும் அழகியல் முறைகளினூடாக அணுகி, அவை
யுத்தத்தையும், அதன் குரூரத்தையும், அதை உந்தித்தள்ளிய கருந்து நிலைகளையும்
எவ்வாறு கேள்விக்குள்ளாக்குகின்றன? அத்துயரங்களிலிருந்தும் காயங்களிலிருந்தும்
எவ்வாறு கடந்து செல்ல முயல்கின்றன? வாழ்க்கை பற்றியும், எதிர்காலம் பற்றியதுமான
நம்பிக்கையினை எவ்வாறு கட்டி எழுப்ப முயல்கின்றன? இவையாவற்றையும் அவை
எவ்வாறு உளவியல் மற்றும் அழகியல் நேர்வுகளாக வெளிப்படுத்துகின்றன என்பது பற்றி
ஆராய்கின்றது. அதற்கான மொழியுடலை எவ்வாறு கட்டுகின்றன என்பது பற்றியும் இங்கு
ஆராயப்படுகின்றது.