Abstract:
உளவியல் அறிஞரான ஜாக்ஸ் லக்கான் (1901-1981) முன்வைத்த "மனிதத் தன்னிலை‟
எனும் "சுயம்‟ பற்றியதான கருத்து உளவியலை இன்னுமொரு கட்டத்திதிற்கு
நகர்த்தியிருப்பதாக உளவியலாளர்கள் கருதுவர். ஓவ்வொரு மனிதனும் பிறப்பதற்கு
முன்னரே மொழியும் மற்றவையும் தனிப்பட்ட மனித சுயத்தைக் கட்டமைப்பதற்கு தயாராக
இருக்கின்றன. அவன் பிறந்தவுடன் அவனுடைய ஊடாட்டம் மற்றையவற்றுடன்தான்
தொடங்குகிறது. அந்தவகையில் தாய் அவனுடைய முதல் மற்றமையாகும்.
பிறவற்றுடனான அவனுடைய முதலனுபவமே மொழித் தன்மை கொண்டது. இது
புரிதலுக்கு முற்கோளாக மொழியிருப்பதைக் குறிக்கிறது. மொழி தன்னை
மற்றையவையிலிருந்துத னியான ஒன்றாக (சுயத்தைக்) கட்டமைப்பதற்கு உறுதுணையாக
உள்ளது. இவ்வாய்வு சுயம் கட்டமைக்கப்படுவதிலுள்ள இயங்கியல் பற்றி ஆராய்கிறது.
சுயமும் மற்றயவையும் இரு எதிர் நிலைகளாகும். எதிர் நிலைகள் என்பது விடயங்கள்
ஒன்றை ஒன்று அர்த்தமுடையதாக்குவதற்கு இன்றியமையாததாகும். இயங்கியலின்
ஒருபடிநிலையான இது இயங்கியலின் முக்கிய இயல்புமாகும். இவ்வாய்வு சுயம் பற்றிய
லகானுடைய கருத்தாக்கம் கட்டமைக்கப்படுவதில் இயங்கியல் முறையின் இயல்பு
காணப்படுகின்றது என வாதிப்பதுடன் சுயத்தைக் கட்டமைப்பதிலுள்ள மொழியின்
இன்றியமையாமையையும் கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் இவ்வாய்வு விபரிப்பு முறை
மற்றும் விமர்சன முறை என்பனவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.