Abstract:
"உளவியல்" என்பது இன்று காணப்படும் பல்வேறு துறைகளுக்குள்ளும் அகலக்கால்
பதித்துள்ளது. உளவியல் சாராத துறைகள் இல்லை என்று கூறும் அளவிற்கு உளவியலின்
தேவை நன்கு உணரப்பட்டிருக்கின்றது. கல்வி உளவியல், மருத்துவ உளவியல், வணிக
உளவியல், அரசியலுக்கான உளவியல் என அதன் பன்முகத்தன்மையை அவதானிக்க
முடிகின்றது. உளவியல் என்பதன் ஆங்கிலப்பதம் "Psychology‟ ஆகும். மனிதனின்
ஆழ்மனத்தோடும், அதன் இயங்கு நிலையோடும் தொடர்புடைய ஒன்றாக உளவியல்
காணப்படுகின்றது. உளவியலும் இலக்கியமும் என இன்று பல்வேறு ஆய்வு முயற்சிகள்
இடம்பெற்றாலும் அவை பிராய்ட், யுங், லக்கான் போன்ற உளவியலாளர்கள் கலை
இலக்கியம் தொடர்பாக முன்வைத்துள்ள கருத்தியல்களுக்கும், வரன்முறைகளுக்கும் ஏற்ப
இன்னமும் முழுமை பெறவில்லை என்றே கூறலாம். அந்தவகையில் சங்க இலக்கியங்களை
உளவியல்சார் கருத்துக்களின் அடிப்படையிலே ஆராய வேண்டியது காலத்தின் தேவை
எனலாம். பழந்தமிழரிடத்தே நிலவிய உளவியல் பற்றிய சிந்தனைகளை ஆராய்ந்து அறிவதே
இந்த ஆய்வின் பிரதானமான நோக்கமாக அமைந்துள்ளது. மேலும், இந்த ஆய்வானது
பழந்தமிழரின் வாழ்வைப் பிரதிபலித்துக்காட்டும் சங்க இலக்கியங்களில் ஓன்றான
நற்றிணையை ஆய்வு மூலமாகக் கொண்டுள்ளது. இதன் இரண்டாம் நிலைத் தரவுகளாக
நற்றிணையோடு தொடர்புடைய கட்டுரைகளும், ஆய்வுநூல்களும் எடுத்தாளப்பட்டுள்ளன. இந்த ஆய்வானது விபரண ஆய்வு, பகுப்பாய்வு போன்ற ஆய்வு முறையியல்களைப் பயன்படுத்தி
மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக நற்றிணைப் பாடல்களில் மறைந்து கிடக்கும்
உளவியல்சார் வெளிப்பாட்டை வெளிக்கொணர்வதற்கு பகுப்பாய்வு முறையியல்
பயன்பட்டுள்ளது. இத்துடன் நற்றிணைச் செய்யுளிட்களில் உள்ள உளவியல் சிந்தனையை
விபரிப்பதற்கு விபரண ஆய்வு முறையியலும் பயன்பட்டுள்ளது. இவ்வாறான ஆய்வினை
மேற்கொள்வதன் மூலம் நற்றிணைப் பாடல்களில் மறைந்து கிடக்கும் உளவியல்சார்
சிந்தனைகள் வெளிக்கொணரப்படுவதோடு இத்தகைய ஆய்வுகள் பழந்தமிழரிடையே
காணப்பட்ட "மனவெழுச்சி‟ குறித்த எண்ணப்பாங்கினையும், மனநிலையினையும்
பட்டியற்படுத்த உதவும். இத்தகைய ஆய்வுகள் ஊடாகவே உலகப்பொதுமையாகக்
கருதப்படும் "ஆழ்மன உணர்வோட்டம்‟ என்பது சங்க இலக்கியங்களுக்கும் பொருந்திவரும்
உண்மை வெளிக்கொணரப்படும் எனலாம். அத்தோடு சங்க இலக்கியங்களிலே பொதிந்து
கிடக்கும் இன்னோரன்ன அறிவியல்சார் சிந்தனைகளையும் வெளிக்கொணர முடியும்.