Abstract:
பின் நவீனத்துவ சிந்தனையாளர் என அறியப்படும் ரோலன் பார்த் தனது "ஆசிரியனின்
மரணம்" எனும் கருத்தமைவை அறிவித்ததன் மூலம் அதுவரை காலம் வேரூன்றியிருந்த
கருத்தியல்களையும் அர்த்தப்படுத்தல்களையும் கேள்விக்குட்படுத்தினார். ஆசிரியன்
மரணித்து விட்டான் என்பதன் மூலம் கருத்தியல் ரீதியில் பிரதிமேல் அவன் கொண்டிருந்த
அதிகாரம் அல்லது உரிமை மறுக்கப்படுகிறது. ஏனெனில் ஒரு பிரதியை எழுதும் போது
பெறப்படும் அர்த்தம் அதனை வாசிக்கும் போது பெறப்படும் அர்த்தத்திலிருந்து
மாறுபட்டது. எனவே அங்கு 'எழுத்தின் மூலம்" அழிக்கப்பட்டு ஆசிரியனின் மரணம்
நிகழ்கிறது. இதன் மூலம் வாசகன் பிரதிக்கான அர்த்தப்படுத்தல்களை உருவாக்குகிறான்.
இதிலிருந்து பிரதி மீது ஆசிரியன் கொண்டிருந்த ஒற்றை அதிகாரம் தகர்க்கப்படுகிறது.
எனவே ஒரு பிரதியின் உள்ளடக்க விடயம் வாசிப்பவனாலேயே உயிர்ப்புமிக்கதாக
மாறுகின்றது என்கிறார் பார்த். இது ஆசிரியனை முன்னிலைப்படுத்தும் அதிகாரத்திற்கு
எதிரானது. ஒரு பிரதி உருவாக்கும் மாறுபட்ட அர்த்தப்படுத்தல்கள் "நிலையற்ற
அர்த்தங்கள்" என்பதன் மூலம் ஆசிரியனையும் வாசகனையும் மீறி
செயற்பட்டுக்கொண்டிருக்கும். ஆனால் அர்த்தங்களை உருவாக்குபவன் வாசகனே என்ற
அடிப்படையில் இது அமையுமெனில் வாசகனை மையப்படுத்தும் செயன்முறையாகிறது.
இதனால் மாறுபட்ட அர்த்தப்படுத்தல்களுக்கான வழிமுறைகள் புறமொதுக்கப்படுவதாக
பொருள் கொள்ளலாம். மேலும் நிலையற்ற அர்த்தங்களை தோற்றுவிக்கும்
பிரதிவாசகனின் அர்த்தப்படுத்தல்களில் இறுதியடைய முடியாது என்பது பற்றியும்
பல்வகைப்பட்ட புரிதல் மட்டங்களைக் கொண்டவாசகன் தோற்றுவிக்கும் அர்த்தம்
ஏற்படுத்துகின்ற கருத்தியல் முரண்கள் தொடர்பாகவும் விமர்சனரீதியில் பகுப்பாய்வை
மேற்கொள்வதுடன் பிரதியின் மரபாரந்த ஒழுங்கு,அர்த்தம் என்பவற்றுக்கு மாற்றான
புதியசிந்தனை, புறவயமான விலகிய பார்வையினைக் கொண்ட நிலையற்ற
அர்த்தங்களை சாத்தியமாக்குதல் என்பன தொடர்பில் கவனம் செலுத்துவதாக இக்கட்டுரை
அமைகிறது.