Abstract:
ஆங்கில மொழியானது இன்று சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதொரு மொழியாக
காணப்படுகின்றது. இலங்கையிலும் கூட இன்று ஆங்கில மொழியானது மிகவும்
முக்கியமானதாகவும், இரண்டாம் மொழியாகவும் விளங்குகின்றது. மேலும் ஆங்கில மொழி
அறிந்திருப்பதானது ஓர் திறனாகவும்(Soft skill) நோக்கப்படுகின்றது. அந்த வகையில்
பாடசாலைகளில் ஆரம்ப கல்வி முதல் இரண்டாம் நிலைக் கல்வி வரை ஆங்கில
மொழியானது பொதுவானதும், அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாக
கற்பிக்கப்படுகின்றதொரு பாடமாகவும் விளங்குகின்றது. இருந்தாலும் கூட ஆங்கில
மொழிப் பெறுபேறுகளானது தொடர்ச்சியாக குறைந்த மட்டத்திலேயே நிலைத்திருப்பதாக
காணப்படுகின்றது. ஆகையால் கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சையில்
ஆங்கில மொழியினுடைய பெறுபேறுகள் குறைவடைந்து வருகின்றமையை
பிரச்சினைகளாகக் கொண்டும், அவற்றுக்கான காரணங்களைக் கண்டறிவதே இவ்வாய்வின்
நோக்கமாகக் கொண்டும் இவ் ஆய்வு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இவ்வாய்விற்கு
முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைத்தரவுகள் பெறப்பட்டு ஆய்வானது
முன்னெடுக்கப்படுகின்றது. இங்கு நேரடி அவதானம், வினாக்கொத்துக்கள்,
கலந்துரையாடல் என்பன முதலாம் நிலைத் தரவுகளாகவும், நூல்கள், சஞ்சிகைகள்,
பத்திரிகைகள் என்பன இரண்டாம் நிலைத் தரவுகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
அளவுரீதியானதும், பண்பு ரீதியானதுமான தரவுகள் பெறப்பட்டுள்ளதோடு
தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் உள்ள ஆங்கில மொழி கற்பிக்கின்ற ஆசிரியர்கள்
மற்றும் மாணவர்கள் மத்தியில் 20 வினாக்கொத்துக்கள் பகிரப்பட்டு தரவுகள் பெறப்பட்டன.
ஆங்கில மொழியினை கற்பதில் உள்ள சொற்ப ஆர்வம், கவனமின்மை என்பன
மாணவர்களிடம் காணப்பட்ட பிரச்சினைகளாக கண்டறியப்பட்டன. மேலும் ஆங்கில
மொழியினுடைய முக்கியத்துவம் தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை
ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் குறைவாகக் காணப்படுகின்றமை. இச்சந்தர்ப்பத்தில்
நவீன கற்பித்தல் நுட்பங்களை பயன்படுத்துவதுமே இப்பிரச்சினைக்கான தீர்வாகக்
காணப்படும். அந்த வகையில் மாணவர்கள் மத்தியில் சோடி, குழு வேலைகளை
அதிகரித்தல், கற்பித்தல் நடவடிக்கைகளை வினைத்திறனாக மேற்கொள்ள கணனி
ஆய்வுகூடம், தொலைக்காட்சி பதிவுகள் போன்றவற்றை பயன்படுத்துவது
வரவேற்கத்தக்கதாகும்.