Abstract:
கனவு பற்றி ஆராய்ந்த உளவியலாளர்களுள் சிக்மண்ட் பிராய்ட் ஒரு குறிப்பிடத்தக்க
இடத்தினைப் பெற்று விளங்குகின்றார். கனவு பற்றி பல்வேறு வகையான கருத்துக்கள்
அறிஞர்களால் முன்வைக்கப்பட்ட போதும் 1900ஆம் ஆண்டில் சிக்மண்ட் பிராய்டினால்
வெளியிடப்பட்ட “கனவுகளின் விளக்கம்” எனும் நூல் முக்கியமானது. இவ்வாய்வானது
இவர் கனவு பற்றி கூறியிருக்கின்ற கருத்துக்களை உளவியல் ரீதியாக நுணுகி
ஆராய்கின்றது. நனவிலி மனதின் பிரதிபலிப்பான கனவுகள் அர்த்தம் நிறைந்தவையாகவும்
பொருள் பொதிந்தவையாகவும் காணப்படுவதை பிராய்ட் எடுத்துக்காட்டினார். ஒவ்வொரு
கனவுக்கும் பின்னாலும் தொடர்புபட்டிருக்கும் உளக்கூறுகளின் உந்துதலாலேயே கனவுகள்
பிறக்கின்றன. அதுவே கனவுக்கான மூலக்காரணியாகும். அம்மூலக்காரணியே கனவுக்கான
அர்த்தத்தை தீர்மானிக்கிறது. இவ்வாறு அர்த்தம் பொதிந்த கனவுகள் பகுத்தறிவற்ற
தன்மையைக் கொண்டவை என பிராய்ட் விளக்கினார். ஒழுங்கீனமான நனவிலி மனதின்
வேட்கைகள் கனவுகளாக வெளிப்படும் போது அவை நடைமுறைக்கு புறம்பானவையாக,
பகுத்தறிவுத் தன்மையற்றதாக வெளிப்படுகிறது. இதன் அடிப்படையில் கனவுகள்
தோன்றுவதற்கான காரணம், கனவு வெளிப்பாட்டின் உளவியல் தாக்கம் என்பனவற்றை
கருத்தில் கொள்வதோடு பகுத்தறிவுக்கு பொருந்தாத காட்சிகளைக் கொண்ட கனவுகளின்
அர்த்த வெளிப்பாட்டின் சாத்தியத்தன்மையையும் விளக்குவதாக இவ்வாய்வு அமைகிறது.