Abstract:
இலங்கையில் வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளில் ஒன்றாக வெளிநாட்டு
வேலைவாய்ப்பு காணப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் அதிகரித்த வாழ்க்கைச்
செலவால் ஒருவரின் உழைப்பு மாத்திரம் செலவை ஈடு செய்ய போதுமானதாக இல்லாத
காரணத்தினால் பெண்களும் உழைக்க வேண்டிய நிலைப்பாடு காணப்படுகின்றது.
அதுமட்டுமன்றி இலங்கையில் வறுமை, குடும்பச்சுமை, சீதனப்பிரச்சினை, வேலை
வாய்ப்பின்மை, தங்கி வாழ விரும்பாமை போன்ற பல காரணங்களினால் பெண்கள்
தொழில் செய்யத் தூண்டப்படுகின்றனர். அந்தவகையில் இலங்கையிலிருந்து அதிகளவான
பெண்கள் பெரும்பாலும் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்கின்றனர்.
அதன்மூலம் வாழ்க்கைத்தர உயர்வை அடைய வேண்டும் என்பதை இலக்காகக்
கொண்டே வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பை நாடுகின்றனர். எனினும் வெளிநாட்டு
வேலைவாய்ப்பின் மூலம் இப்பெண் தொழிலாளர்களின் பொருளாதாரத்தில் எத்தகைய
மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியும் பொருட்டு இவ்வாய்வு
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே ஏறாவூர் பற்று பிரதேசசெயலகப் பிரிவில் பெண்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
அவர்களின் பொருளாதாரத்தில் வெளிநாடு செல்வதற்கு முன்னர் இருந்த நிலையை விட
ஓரளவான முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என முடிவு பெறப்பட்டுள்ளது. ஆய்வின்
முடிவினை கருத்தில் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மூலமும்,
உள்நாட்டிலேயே அவர்களுக்கான சுயதொழில்வாய்ப்புக்களை ஊக்குவிப்பதன் மூலமும்,
பெண்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை சிறப்பாக வடிவமைப்பதனூடாகவும் இப்பெண்
தொழிலாளர்களின் பொருளாதாரத்தில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம் என பல
சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.