dc.description.abstract |
இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு சமூகப் பிரச்சினையாக சிறுவர்
துஷ்பிரயோகம் காணப்படுகின்றது. அபிவிருத்தியடைந்து வரும் இலங்கை போன்ற
நாடுகளில் நாளுக்கு நாள் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துக் கொண்டே
செல்வதால் அது நாட்டின் சுபீட்சத்தையும், சிறுவர்களின் எதிர்காலத்தையும் நாசமாக்கி
விடுமோ என்ற அளவுக்கு அச்ச நிலையைத் தோற்றுவித்துள்ளது. இந்தவகையில்,
அண்மைக்காலமாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரிவுகளில் சிறுவர்
துஷ்பிரயோகமானது அதிகமாக இடம்பெற்றுக் கொண்டு வருவதை அவதானிக்கலாம்.
இப்பிரதேசத்தில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் அநேகமானவை பெற்றோர்,
வளர்ப்புப் பெற்றோர், பராமரிப்பாளர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், தொழில்
வழங்குனர்கள், வயோதிபர்கள் மற்றும் அயலவர்கள் போன்றவர்களாலேயே
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்களால் சிறுவர்கள் உடலியல் ரீதியாகவும்,
உளவியல் ரீதியாகவும் மற்றும் பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டு
பல்வேறு உடல் மற்றும் உளத் தாக்கங்களுக்குள்ளாகியுள்ளனர். இவற்றின் தாக்கங்கள்
சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளிலும், உள விருத்தியிலும் மற்றும் ஆளுமை
விருத்தியிலும் பல்வேறு பாதிப்பைச் செலுத்தியுள்ளன. இந்தவகையில், இவ்வாய்வானது
சிறுவர் துஷ்பிரயோகத்துக்கான காரணிகளைக் கண்டறிந்து அவற்றை வெளிப்படுத்த
முயற்சி செய்வதையும், அதற்கான தீர்வுகளை இனங்காண்பதையும் மற்றும் இனிவரும்
காலங்களில் ஏற்படும் சிறுவர் துஷ்பிரயோகங்களைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை
வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆய்வினை மேற்கொள்ளப்
பயன்படுத்தப்பட்ட ஆய்வு முறையியலாக பகுப்பாய்வு, விளக்க மற்றும் விபரண முறைகள்
பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், இவ்வாய்வுக்காக முதலாம் நிலைத் தரவு சேகரிப்பு
முறையாக அவதானிப்பு, பேட்டிமுறை, மற்றும் வினாக்கொத்து முறைகள்
மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் நிலைத் தரவு சேகரிப்பிற்கு புத்தகங்கள், சஞ்சிகைகள்,
கட்டுரைகள், பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்கள் போன்றன
பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வின் முடிவாக, சாய்ந்தமருது பிரதேச
செயலகத்துக்குட்பட்ட பிரிவுகளில் அண்மைக் காலங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள்
அதிகரித்துள்ளதால் சிறுவர்கள் உடலியல் மற்றும் உளவியல் ரீதியான பல்வேறு
பிரச்சினைகளைத் தற்கால சமூகத்தில் எதிர்நோக்கியுள்ளனர். எனவே, இப்பிரதேசத்தில்
நிகழும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து மக்களுக்குத்
தெளிவுபடுத்தி, அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து அதனைக் குறைப்பதற்கு
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இவ்வாய்வு ஆராய்ந்து தெளிவுபடுத்துகிறது. |
en_US |