Abstract:
உலகில் அதிகமாக நிகழ்ந்து வரும் அனர்த்தங்களில் வெள்ள அனர்த்தமும் ஒன்றாகும். பொதுவாக வெள்ளம் என்பது ஒரு நிலப்பரப்பில் அளவுக்கதிகமாக வழமைக்கு மாற்றமான முறையில் நீர் நிறைந்து நிலமட்டத்திலிருந்து நீர் வழியாமல் உயர்ந்த மட்டத்தினை கொண்ட நிலையினை குறிக்கும். இவ் அனர்த்தமானது உலகின் பல பாகங்களில் நிகழ்ந்து வருகின்றது. அந்த வகையில் மத்திய மாகாண கண்டி மாவட்ட அகுரணை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அகுரணை 6ஆம் மைல் சந்தி, துணுவில, தெலுமுகஹவத்த பிரசேங்களில் அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படுகின்றது. இதனால் பிரதேச மக்கள் பலவிதமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவ்வெள்ளத்துக்கான காரணங்களை ஆராய்வதே ஆய்வின் பிரதான நோக்காகவுள்ளது. மேலும் அனர்த்தத்தினால் பிரதேச மக்கள் முகங்கொடுக்கும் சமூக, பொருளாதார, சூழல் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவருதல், வெள்ள அனர்த்தத்தினை குறைப்பதற்கான தீர்வுகளை முன்மொழிதல் என்பன ஆய்வின் துணை நோக்கங்களாக உள்ளன. இவ்வாய்வுக்கான முதல்நிலை தரவு சேகரிப்பு முறைகளாக நேர்காணல், கலந்துரையாடல், வினாக்கொத்துக்களை பகிர்தளித்தலும் இரண்டாம் நிலை தரவு சேகரிப்பு முறைகளாக பத்திரிகை, புள்ளிவிபரவியல்தரவுகள், இணையம் போன்றனவும் பயன்படுத்தப்பட்டன. மேலும் இவ்வாய்வுக்கு MS OFFICE, ARC GIS போன்ற கணினி மென்பொருட்களும் பயன்படுத்தப்பட்டன. அத்தோடு ஆய்வின் முடிவாக வெள்ளத்துக்கான காரணங்களை இணங்கண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர முடிந்தது. மேலும் வெள்ள அனர்தத்தினைக் கட்டுப்படுத்த தீர்வுகளைக்கூறி நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை ஏற்படுத்துவதே இவ்வாய்வின் விளைவாக அமையும்.