Abstract:
பல்லின மக்கள் வாழும் நாடு இலங்கை. அவ்வாறான நாடுகளில் மொழிக்கலப்பு என்பது
தவிர்க்க முடியாததொன்றாகும். இலங்கை நாடானது, பெரும்பான்மை சிங்கள மொழிக்
குறியதாக இருந்தாலும், அங்கு வாழும் முஸ்லிம் மக்களின் தாய் மொழியானது
தமிழாகும். வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய முஸ்லிம் மக்களின் பேச்சுவழக்கில்
அதிகமான சிங்கள மொழிச் சொற்கள் கலந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
ஏனெனில், அப்பிரதேசங்கள் அநேகமாக சிங்களப் பிரதேசங்களுக்கு அயற்
பிரதேசங்களாகவும் சிங்கள கிராமங்களால் சூழப்பட்டதாகவுமே அமைந்துள்ளன.
அந்தவகையில், கம்பஹா மாவட்ட பிரதேசம் அதிகமாக சிங்கள மக்களுடன்
இணைக்கப்பட்டிருப்பதனால், அவர்களது பேச்சுவழக்கில் அதிகமாக சிங்களக் கலப்பு
அமையப் பெற்றிருப்பதைக் காணலாம். இவ்வாறு சிங்கள மக்கள் செறிந்து வாழும்
மாவட்டமான கம்பஹா மாவட்ட பிரதேசத்தின் முஸ்லிம் மக்களின் பேச்சுவழக்கில்
கலந்துள்ள சிங்களமொழிச் சொற்களை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
இவ்வாய்விற்காக பண்புசார் ஆய்வு முறைமை பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, முதலாம்
நிலைத்தரவுகளும் இரண்டாம் நிலைத்தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வுக்
களத்துக்குச் சென்று ஆய்வு தொடர்பான விடயங்களை சேகரித்தல் மற்றும்
கலந்துரையாடல், நேர்காணல், அவதானம் போன்ற ஆய்வு நுட்பங்கள் முதலாம்
நிலைத்தரவுகளாகவும் பேச்சுவழக்கு தொடர்பாக எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள்,
ஆய்வுக்கோவைகள், சஞ்சிகைகள் போன்றன இரண்டாம் நிலைத் தரவுகளாகவும்
பயன்படுத்தப்பட்டுள்ளன. கம்பஹா மாவட்ட பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்களின்
பேச்சுவழக்கில் அதிகமாக சிங்கள மொழிச் சொற்கள் கலந்துள்ளதை இவ்வாய்வின்
மூலம் கண்டறியப்பட்டுள்ளன.