Abstract:
புரையோடிப்போன இலங்கையின் இனமுரண்பாட்டிற்கு ஒரு அரசியலமைபபு ரீதியான குறைந்தபட்ச தீர்வு என்ற வகையில் 1987 ஜுலை மாதம் நடைபெற்ற இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் கொண்டு வந்த மாகாணசபைத்திட்டம் அமைந்ததெனலாம். இத்திட்டம் இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பல தரப்புக்களாலும் கொள்கையளவில் ஏற்றே நடைமுறைபப்டுத்தபப்ட்டு வருகின்றது. கடந்த இரண்டரை தசாப்த காலங்களுக்கு மேலாக தொழிற்படும் இம்மாகாணசபை அமைபபு தனது செயற்பாட்டின் போது பல சவால்களையும், நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றது. இது ஆராயப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். இத்தலைப்பு "மாகாணசபைத்திட்டம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு" என்ற கருதுகோளை மையமாகக் கொண்டு இத்திட்டம் அறிமுகபப்டுத்தப்பட்ட சூழ்நிலை, இலங்கை - இந்திய உறவு, அதன் கட்டமைப்பு , வட- கிழக்கு இணைப்பு, சபைக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள், அவ்வதிகாரங்கள் வழங்கப்பட்ட விதம், செயற்பாட்டில் எதிர்நோக்கும் சிக்கல்கள் என்பன ஆய்வு செய்யப்படுகின்றது. இந்த ஆய்வானது பண்பு ரீதியான ஆய்வின் மூலமே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. மாகாணசபை சம்பந்தமாக வெளிவந்த நுல்கள், சஞ்சிகைகள், ஏலவே ஆய்வு செய்து பிரசுரிக்கப்பட்டதும், பிரசுரிக்கப்படாததுமான ஆவணங்கள், ஒரு சில மாகாண சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்கள் மூலம் பெற்றுக் கொண்ட தகவல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரதானமாக துணைநிலைத் தரவுகளின் பால் தங்கியிருந்து மேசை ஆய்வு (Desk Research) மேற்கொள்ளப்ப ட்டுள்ளது. அந்த ஆய்வின் பயனாக ஆளுநர் பதவியில் காணப்படும் நெருக்கடிகள் குறிப்பாக வட, கிழக்கு மாகாண ஆளுநர்களின் செயற்பாட்டில் காணப்படும் பிரச்சினைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் மத்தியரசின் மீதான மாகாண சபைகளின் மேலாதிக்கம், அதன் நெருக்கடிகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக திவிநெகும சட்ட மூலத்திற்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் மாகாணசபையின் அடித்தளமே ஆட்டம் காணச் செய்யப்பட்டுள்ள விதம், அது மாகாண சபைகளில் ஏற்படுத்தும் சிக்கல் நிலை என்பவற்றுடன் நிதி நிலைமையில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய விபரமும் பெறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மாகாண சபைகள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ள விதம் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில் இவற்றை சுமூகமான நிலைக்குக் கொண்டு வர காணக்கூடிய பரிகாரங்கள் பற்றியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடுநிலைத் தன்மையுடன் நின்று மாகாணசபைத் திட்டத்தை அடித்தளமாகக் கொண்டு இனப்பிரச்சினைக்கான இணக்கத் தீர்வினைக் காண இதனை எவ்வாறு முன்கொண்டு செல்வது பற்றியும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.