Abstract:
கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் பழம்பெரும் சிறப்புக்கள் வாய்ந்தவொரு திருத்தலமாகும். இன்று கிழக்கு வாழ் இந்து மக்களின் புராதன அடையாளமாக இவ்வாலயம் திகழ்கின்றது. இதனால் திருக்கோவில் ஒரு தேசத்துக் கோயிலாகச் சிறப்பிக்கப்படுகின்றது. இத்தலத்தின் பெருமைகள் அது பற்றிக் கூறப்படும் பழமை மிக்க ஐதீகக் கதைகள், நம்பிக்கைகள், அற்புதங்கள், நூல்கள் ஆகியவற்றினால் பறை சாற்றப்படுகின்றன. இருப்பினும் இவற்றை விட இவ்வாலயத்தில் உள்ள தொல்பொருட்கள் இத்தலத்தின் பெருமையையும், தொன்மையையும் வெளிப்படுத்தும் முக்கிய ஆவணங்களாகும். இவை பேணிப்பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதே இவ்வாய்வின் நோக்கமாகும். கல்வெட்டுக்கள், எழுத்துக்கள் பொறித்துள்ள தூண்கள், பழைய விக்கிரகங்கள், பூசைபொருட்கள் ஆகியன இவ்வாலயத்தின் தொன்மையைக் காட்டி நிற்கும் தொன்மங்களாகும். இவற்றுள் இங்குள்ள கல்வெட்டுக்களும் தூண்களும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய சிறப்பு வாய்ந்தனவாகும். இவை பற்றிய தொடர்ச்சியான ஆய்வுகள் இன்றியமையாதவை. இங்குள்ள கல்வெட்டுக்கள், தொல்பொருட்கள் பற்றிய பல ஆய்வுகள் இடம் பெற்றுள்ள போதும் நுட்பமான முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கவில்லை என்பது இவ்வாய்வின் பிரச்சினையாகும். இருப்பினும் தொடர்ச்சியான ஆய்வுகள் காத்திரமான மேலும் பல கண்டுபிடிப்புக்களை வெளிப்படுத்தலாம் எனும் கருதுகோளை முன்வைத்து அண்மைக்காலத்தில் இங்கு நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சி பற்றிய ஒரு பார்வையினை இவ்வாய்வு செய்கின்றது.