Abstract:
பங்காளதேஷ் அதனது சுதந்திரத்திலிருந்து நான்கு தசாப்தங்களைக் கடந்துள்ள போதிலும் ஜனநாயகம் மற்றும் அபிவிருத்திப் பரப்புக்களில் அதனது அடைவுகள் குறிப்பிடத்தக்களவு இல்லை. அந்நாட்டின் ஒவ்வொரு அரசியற் தலைவரும் ஜனநாயகம் பற்றி சுவாரஸ்யமாகப் பேசியிருக்கின்றார். ஆனால் அதனை நடைமுறைபப்டுத்துவதில் அவர்கள் தோல்வி கண்டனர். வாக்களிப்பின் மூலம் அதிகாரத்திற்கு வந்தகட்சிகள் கூட ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு தவறியுள்ளன. இராணுவச் சதிப்புரட்சியின் மூலம் அதிகாரத்தினைக் கைப்பற்றிய தலைவர்கள் தமக்கே உரித்தான ஜனநாயக மாதிரியினை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தியிருந்தனர். அதேவேளை வளர்ச்சியடையாத அரசியல் கலாசாரம், வறுமை, போதிய எழுத்தறிவின்மை என்பவற்றைக் கொண்ட பங்காளதேஷ் சமுகம் ஜனநாயகத்தின் விருத்திற்கு தேவையான அம்சங்களை வழங்குவதிலிருந்தும் தூர விலகி நிற்கின்றது. எனினும் அரசியல் ரீதியாக வளர்ச்சியுற்ற, பொருளாதார ரீதியாக செழுமையடைந்த ஓர் அரசினை அமைப்பதற்கான ஆவல் அந்நாட்டு மக்களிடம் இல்லாமல் இல்லை. அங்குள்ள இரு கட்சிகளை நோக்கிய மக்களின் அணி திரள்வு, அரசியல்வாதிகளின் யதார்த்தத்தினைப் புரிந்துகொள்ள முனையும் அண்மைய போக்குகள், தேர்தலைத்தவிர அதிகாரத்தினைக் கைப்பற்றுவதற்கான வேறு மார்க்கங்களில் மக்கள் நம்பிக்கையற்றுச் செயற்படும் நிலை என்பன ஜனநாயக விருத்திற்கான வாய்ப்பினை பங்காளதேஷில் இயலுமானதாக்கியுள்ளன.