Abstract:
வேதாரணியம் என வழங்கப்படும் திருமறைக்காட்டில் சைவ வேளாளர் மரபில்
கேடிலியப்பப்பிள்ளை கெஜவல்லி அம்மையார் ஆகிய பெற்றோருக்கு மகவாக அவதரித்த
தாயுமானவ சுவாமிகள் என்பவரினால் பாடப்பட்ட பாடல்களின் தொகுதிக்கு
தாயுமானவ சுவாமிகள் திருப்பாடல்கள் என்று பெயர். இப்பாடல்கள் 17ஆம், 18ஆம்
நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் தோற்றம் பெற்றன. ஐம்பத்தாறு தலைப்புகளில்
அமைந்த இவரது பாடல்களை அகவல், வண்ணம், கண்ணி என வகைப்படுத்துவர். உள்ளம்,
நெஞ்சு, இதயம், ஆத்மா, மாயாகாரியம் என மனதை அழைக்கும் தாயுமானவர், சோக்ரட்டிஸ்,
பிளேட்டோ, அரிஸ்ரோட்டில், அனச்சகோரஸ், லொக் டேக்காட், கான்ட், வில்லியம் ஜேம்ஸ்,
கியூம், கில்பேட் ரையில் போன்ற உளவியலாளர்களின் உளம் பற்றிய சிந்தனைகளுக்கு
உடன்பாடான வகையிலும், எதிர்மறையான வகையிலும் தம் சிந்தனைகளை
முன்வைத்துள்ளார். மனதினைப் பெரியதொரு மாயாதத்துவமாகக் கருதி மனித நடத்தைக்குப்
பின்புறம் மனம் என்ற வகையில் மனதை அணுகுகின்றார். இப்பின்னணியில், தாயுமானவர்
பாடல்களில் மனம் பற்றியதொரு விமர்சன நோக்காக இவ்வாய்வு அமைகின்றது.