Abstract:
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 9.7% ஆன முஸ்லிம்கள் சிறுபான்மையினராக தீவெங்கும் பரந்து
வாழ்கின்ற அதேவேளை, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பெரும்பான்மையாக
வாழ்கின்றனர். மற்றும் சில மாவட்டங்களில் முஸ்லிம்கள் சொற்பமாக வாழ்கின்றனர். இதில் மொனராகலை
மாவட்டமும் ஒன்றாகும். இங்கு 2.17% முஸ்லிம்கள் மாவட்டத்தின் 1324 மொத்தக் கிராமங்களில் 05
கிராமங்களில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அலுப்பொத்த, பகினிகஹவெல, கொட்டபோவ, கனுல்வெல,
மெதகம ஆகியவையே அக்கிராமங்களாகும். இவை தவிர இம்மாவட்டத்தில் பல முஸ்லிம் குக்கிராமங்களும்
ஆரம்ப காலங்களில் முஸ்லிம்களால் கைவிடப்பட்ட சில கிராமங்களும் கணப்படுகின்றன. இதன்
அடிப்படையில், இவ்வாய்வு, மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள முஸ்லிம் கிராமங்களின் தோற்றப்
பின்னணி, அவற்றில் முஸ்லிம்களின் பரம்பல் என்பவற்றைக் கண்டறிதல் மற்றும் கைவிடப்பட்ட
கிராமங்களை அடையாளப்படுத்தல் எனும் இரு பிரதான நோக்கங்களைக் கொண்டுள்ளது. மேற்படி
நோக்கங்களை அடைவதற்காக இம்மாவட்ட முஸ்லிம் கிராமவாசிகளிடம் பரவியிருந்த செவிவழிக் கதைகள்,
கூற்றுக்கள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர பழைமைவாய்ந்த பள்ளிவாயல்கள்,
அடக்கஸ்தளங்கள், ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர் கால வீட்டுப்பாவனைப் பொருட்கள் என்பவற்றின்
மூலமும் இக்கிராமங்கள் பற்றிய பல தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இக்கிராமங்கள், ஆரம்ப
காலங்களில், கண்டி-கிழக்கு மற்றும் கண்டி-தென் மாகாணங்களின் வர்த்தகப் பாதைகளில் அமைந்துள்ளன
என்பதனால் முஸ்லிம் வர்த்தகர்கள் தமது நெடுந்தூர பயணத்தின் போது ஓய்வெடுப்பதற்காக
தரித்துச்சென்ற ஒவ்வொரு பிரதேசங்களும் கிராமங்களாக தோற்றம் பெற்றுள்ளன என்பது இவ்வாய்வின்
மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு முஸ்லிம்கள் தமது இலகு வாழ்க்கை கருதி ஒரு
பிரதேசத்திலிருந்து மற்றொரு பிரதேசத்தை நோக்கி நகர்ந்தமை பல கிராமங்களைத் தோற்றம்
பெறச்செய்தும் மற்றும் சில கிராமங்களை கைவிடச்செயது; முள்ளன என்பதும் தெளிவாகின்றது.