Abstract:
அரசுக்கும் அதன் மக்களுக்கும் இடையிலான உறவு மற்றும் ஆட்சி செய்யும் கோட்பாட்டினைத் தெரிவு
செய்தல் என்ற விடயத்தில் குடியுரிமை எண்ணக்கரு முக்கியத்துவம் பெறுகின்றது. அதாவது அரசின்
அங்கத்தவர்களாக யார் யாரை அங்கீகரிப்பது, அத்தகையவர்களின் உறுப்புரிமையை எவ்வாறு பெற்றுக்
கொள்வது என்பன பற்றிய விதிகளை அரசுகள் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். ஒரு சமூகத்தின்
தனிமனிதனை சக மனிதர்களுடன் சமூக மற்றும் அரசியல் ரீதியாக இணைத்து வைக்கும் தொடர்புகள்தான்
குடியுரிமையின் சாரமாக உள்ளது. இவ்வாய்வானது நவீன குடியுரிமையை குடியுரிமை எண்ணக்கருவின்
ஆரம்ப காலகட்டமான கிரேக்க மற்றும் ரோமானியகாலக் குடியுரிமை சிந்தனையுடனும் வு.ர்.மார்ஷலின்
சமூகக் குடியுரிமை சிந்தனையுடனும் தொடர்புபடுத்தி ஒப்பிட்டு ஆராய்வதாக உள்ளது. தனிமனிதனை
அரசுடனும் ஏனைய சக மனிதர்களுடனும் இணைக்கக்கூடிய இருவழித் தொடர்பை ஆரம்ப காலக்
குடியுரிமைகள் கொண்டிருந்ததா? அவற்றிலிருந்து நவீன குடியுரிமை எவ்வாறான விடயங்களை
உட்கொண்டுள்ளது? எவ்வாறு வேறுபடுகின்றது? என்பவற்றை உள்ளடக்கியதாக ஆய்வுப் பிரச்சினை
காணப்படுகின்றது. இப்பின்னணியினை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை என்றால் என்ன? கிரேக்காலக்
குடியுரிமை, ரோமானிய காலக் குடியுரிமை,வு.ர்.மார்ஷலின் குடியுரிமை சிந்தனைகள் மற்றும் மேற்படி
குடியுரிமைப் பண்புகள் நவீன குடியுரிமையில் பிரதிபலிக்கும் விதம் என்பவற்றை கண்டறிய இவ்வாய்வு
முயற்சிக்கின்றது. இவ்வாய்வானது விபரணப் பகுப்பாய்வு முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கான
தரவுகள் இரண்டாம் நிலைத் தரவு மூலங்களான நூல்கள் மற்றும் இணையத்தளங்களிலிருந்து
பெறப்பட்டுள்ளன. தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததிலிருந்து நவீன குடியுரிமையானது அரசியல், சட்ட
ரீதியானதாக காணப்படுவதுடன் ஆரம்ப காலங்களில் காணப்பட்ட வரையறுக்கப்பட்ட குடியுரிமை
என்பதிலிருந்து வேறுபட்டு பரந்துபட்டதாக உள்ளமையும் ஆய்வின்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.