Abstract:
இவ்வாய்வானது நவீனகால அறிவாராய்ச்சியலில் அறிவினைப் பெறுதல் தொடர்பில் ஜோன்லொக்கினால்
முன்வைக்கப்பட்ட முதல்நிலைப் பண்புகள், வழிநிலைப் பண்புகள் எனும் வேறுபாட்டைப் பார்க்ளி எவ்வாறு
தனது A Treatise concerning the principle of human knowledge எனும் நூலில் எடுத்துக் காட்டுக்களினூடாக
நிராகரித்து லொக்கின் அறிவாராய்ச்சியியற் திட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினையினைத் தீர்க்க முற்படுகின்றார்
என்பதனை ஆய்வு செய்வதாக அமைகின்றது. அனுபவவாதியான ஜோன்லொக் மனித அறிவானது
புலணுணர்ச்சி,(sensation) ஆழ்ந்து எண்ணல்(reflection) எனும் இருவழிகளில் கிடைக்கப் பெறுகிறது எனவும்
இவ்வாறு பெறப்படும் உட்பதிவுகளை உளம் தன்னிடத்தே உடனடியாகக் காண்கின்ற பொருள்
“எண்ணம்”(idea) என்றழைத்தார். இவ் எண்ணங்களை தனிநிலை, கூட்டுநிலை எண்ணங்களாக பாகுபாடு
செய்தார். புறப்பொருட்கள் நம்முள் இவ் எண்ணங்களை உண்டாக்கவல்ல திறமைகளைப் பெற்றுள்ளன.
இத்திறமைகளையே லொக் பண்புகள் என அழைத்தார். இப்பண்புகளை முதல்நிலை, வழிநிலை பண்புகள்
என வேறுபடுத்தினார். முதல்நிலை பண்புகள் பொருட்களைச் சார்ந்தது எனவும் வழிநிலை பண்புகள்
பொருட்களில் இல்லாதிருப்பவை என்றும் இது மனிதர்களுக்கு மனிதர்கள் வேறுபடும் என்றும் லொக் தனது
Essay Concerning Human Understanding எனும் நூலில் வெளிப்படுத்தினார். லொக் இவ்விரு
பண்புகளையும் வேறுபடுத்திக் காட்டிய போதும் அவற்றிற்கிடையிலான உறவு முறையை அவரால்
தெளிவுறுத்த முடியவில்லை. எனவே இக்குறைபாட்டை நீக்குவதற்கு பார்க்ளி தனது மேற்படி நூலில்
லொக்கின் இப்பண்பு வேறுபாட்டினை நிராகரித்து முதல்நிலை, வழிநிலைப் பண்புகள் எனும் இரண்டும்
பிரிக்க முடியாத வகையில் ஒன்று சேர்ந்துள்ளன எனவும் இவை யாவும் எமது உளத்தைச் சார்ந்தே
காணப்படுகிறதே தவிர வேறில்லை என்பதனை தனது நூலில் எடுத்து விளக்கி தீர்வு காண முயன்றார்.
பார்க்ளியின் இவ் முயற்சியினை கண்டறிந்து விளக்குவதற்காக இவ்வாய்வானது பகுப்பாய்வு முறையியல்,
விமர்சன முறையியல், ஒப்பீட்டாய்வு முறையியல் என்பவற்றைப் பயன்படுத்துகின்றது. மற்றும்
இவ்வாய்வுக்கு வேண்டிய தரவுகள் இலக்கியங்கள், சஞ்சிகைகள் இணையத்தள தரவுகள் என்பவற்றிலிருந்து
பெறப்பட்டு சீராக வடிவமைக்கப்படுகின்றது.