Abstract:
உலகிலுள்ள பல பிராந்தியங்கள், அரசுகளில் வாழும் மக்களுக்கிடையில் தொடர்புகளையும்,
தங்கியிருத்தலையும் பூகோளமயமாதல் ஏற்படுத்தியுள்ளது. பூகோளமயமாதல் உலகத்தினைச் சிறிய
கிரகமாக (World Planet) அல்லது பூகோளக்(Global Village) கிராமமாக மாற்றியுள்ளது. உலக
அரசாங்கம் ஒன்றைத் தாபிப்பதற்கான முன்னோக்கிய பாய்ச்சலாக இது கருதப்படுகின்றது. உலக
அரசாங்கத்தினை தாபிப்பது தொடர்பாக பெரும் தத்துவஞானிகளாகிய ரூசோ, கான்ற், கிறீன் போன்றவர்கள்
கனவு கண்டுள்ளார்கள். முதலாளித்துவ நாடுகளின் மூலதன நீரோட்டம், புதிய தொழில் நுட்பம்
உலகத்திலுள்ள பின் தங்கிய பிராந்தியங்களின் அபிவிருத்திக்குத் தலைமை தாங்கலாம் என
எதிர்பார்க்கப்படுகின்றது. உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் என்ன நடைபெறுகின்றது என்பதை
இணையங்கள் உடனடியாக வெளியிடுகின்றன. அனேக நாடுகள் ஜனநாயக முறைமையின்
தொழிற்பாட்டினைக் கற்கின்றன என்ற செய்தியையும், ஜனநாயகமயவாக்கத்திற்குள் வருகின்றன என்ற
செய்தியையும் இது தருகின்றது. சமத்துவத்துடனான சுதந்திரத்தினை உலக மக்கள் அனைவரும் புரிந்து
கொள்வதற்கான வாய்ப்பினையும் இது வழங்குகின்றது. மேலும் வறுமை, வேலையின்மை, கல்வியறிவின்மை,
நோய்கள், பட்டினி போன்றவற்றினை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகளைச் சிவில் சமூகம் மேற்கொண்டு
வருகின்றது. இதனால் பூகோளளவில் சிந்தித்து தேசியளவில் செயற்படுதல் (Think Globally, Act
Nationally) என்ற கோசம் முதன்மை பெற்று வருகின்றது. பூகோளமும் உள்;ரும் இணைந்து ‘Glocal’
என்றாகிவிட்டது (Global + Local = Glocal) பிரான்சிய எழுத்தாளர்களாகிய Sonnatag, Arenas ஆகிய
இருவரும் இதனை கலப்புப்பண்பாதல்(Hybridization) என அழைக்கின்றனர். எனவே பூகோளமயமாதல்
தேசிய அரச முறைமையின் இயல்புகளில் செல்வாக்குச் செலுத்தி பூகோள அரசாங்கத்தினை
உருவாக்குவதற்கான முன் நிபந்தனைகளை உருவாக்குகின்றது. இவ்வகையில் தேசிய அரச
முறைமைகளின் செயற்பாடுகளில் பூகோளமயமாதல் செலுத்தும் செல்வாக்கினால் “சமூகத்தில்
தனியதிகாரமுடையது அரசு” என்ற கோட்பாடும்,“இறைமை பற்றிய ஒருமைவாதக் கோட்பாடும்”(Monistic)
மீள் விவாதத்திற்குரியதாகியுள்ளது