dc.description.abstract |
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமாகிய டாக்டர் அப்துல்
கலாம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களினால் விரும்பப்படுகின்ற ஒரு
ஆளுமை மிக்க மனிதராக விளங்கியவர். இன்றைய இளைஞர் சமூகத்தின் கனவு
நாயகனாக விளங்குபவர். இத்தகைய சிறப்புக்கு அவரது பன்முக ஆளுமையே
காரணமாகும். அவருடைய அந்த பன்முக ஆளுமையின் சிறப்பினை மீள்பார்வை
செய்து சமகால சமூகத்தின் மத்தியில் அதனை மீள் வலியுறுத்துவதே இவ்வாய்வின்
பிரதான நோக்கமாகும். 20ம் நூற்றாண்டில் பல்வேறு அறிவாற்றல்கள்,
புலமைத்துவங்களின் போக்குகள் தலைமைத்துவம் பற்றிய எண்ணக்கருவில்
மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 18ம், 19ம்
நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஜனநாயகப் புரட்சிகள் ஆட்சித் திறன், அதிகாரம்
தொடர்பான எண்ணக்கருவை ஆள்நிலைப்படுத்தலில் நின்று நீக்கம் செய்கிறது.
அதாவது ஆட்சியில் இருப்போரின் தன்னிச்சையான அதிகார துஷ்பிரயோகங்களை
மட்டுப்படுத்தி ஜனநாயக வழிமுறையிலான தலைமைத்துவ பண்புகளை விருத்தி
செய்ய வழிவகுத்துள்ளது.“பகுத்தறிவு ஆக்கங்கள் (Creation of Rationality)
தீர்மானங்கள், உணர்வுகள் ஆகியவற்றை நம்பிக்கையினதும், நடவடிக்கையினதும்
அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்படும் ஒரு தனிநபரே தலைவராவார்” என
ஈ.சீ.லிண்டர்மன் (E.C. Linderman) என்ற அறிஞர் குறிப்பிடுகின்றார். இந்த
வகையில் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம்
அவர்கள் இளைஞர்களின் கனவு நாயகனாக; அரசியல் வாதியாக; விஞ்ஞானியாக;
சிறந்த நிர்வாகியாக; சிறந்த ஆசிரியராக தனது பன்முக ஆளுமையின் மூலம்
இந்தியாவை வல்லரசாக்குவதில் முனைப்புக் காட்டியுள்ளார். இந்தியாவின் பல்வேறு
முன்னேற்றகரமான மாற்றங்களுக்கு அவரது சிந்தனைகள் அடித்தளமிட்டிருந்தன.
அவர் தன்னுடைய வார்த்தைகளாலும், தன்னுடைய வாழ்க்கையாலும்
இளைஞர்களுக்கு ஒரு சிந்தனைத் தளத்தையும், உத்வேகத்தையும் கொடுத்தவர்.
இந்தவகையில் நோக்குகின்ற போது அவருடைய பன்முகத் தன்மை கொண்ட
ஆளுமைத் திறன் எந்தவொரு மனிதனதும், சமூகத்தினதும், நாட்டினதும் உயர்ச்சிக்கு
ஒரு முன்மாதிரியாக, படிக்கல்லாக அமையும் என்பதனை இவ்வாய்வுக் கட்டுரை
வலியுறுத்துகின்றது.இவ் ஆய்வுக்குத் தேவையான தரவுகள் டாக்டர் அப்துல் கலாமின்
நூல்கள்,ஏனைய இரண்டாம் நிலைத் தரவுகளான நூல்கள், ஆய்விதழ்கள்,
இணையத்தளக் கட்டுரைகள் என்பவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
இவ்வாய்வானது ஒப்பீட்டு அணுகுமுறை, பகுப்பாய்வுமுறை, வரலாற்றுமுறை,
உளவியல் அணுகுமுறை என்பவற்றின் துணைகொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. |
en_US |