Abstract:
தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் பௌத்தம்,சமணம்,வைணவம்,
இஸ்லாம்,கிறிஸ்தவம் எனப் பல் மதங்களின் செல்வாக்குக் காணப்படுகின்றது. தமிழில்
அம்மதங்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்கள்
பலதோற்றம் பெற்றுள்ளன. இஸ்லாமியக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு
படைக்கப்பட்டுள்ள தமிழ் இலக்கியங்களில், அறபுச் சொற்கள் மாத்திரமன்றி
அறபுமொழியோடு நீண்ட காலத் தொடர்பு கொண்டுள்ள பார்சி மொழிச் சொற்களும்
சிறுபான்மையாகக் கலந்துள்ளன. இஸ்லாமியக் கருத்துக்களை அடிப்படையாகக்
கொண்டு அமைந்துள்ளதால் இலக்கியங்களில் இஸ்லாமியப் பண்பாட்டையும்
கருத்துக்களையும் சிறந்த முறையில் விளக்குவதற்கு அறபு, பார்சிமொழிச் சொற்கள்
மிகப் பொருத்தமானதாக இருந்தமையினால் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள்
அவற்றைக் கையாண்டுள்ளனர். எனினும், அறபு, பார்சிமொழிச் சொற்களை
அறியாதோர் இத்தகைய இலக்கியங்களைப் படித்துப் பயனடைய முடியாத நிலை
காணப்படுகின்றது. இந்தச் சிக்கலை தமிழ் இலக்கியஅறபுச் சொல் அகராதி எவ்வாறு
தீர்க்கின்றது என்பது பற்றியதாக இவ்வாய்;வு அமைந்துள்ளது. இஸ்லாமியத் தமிழ்
இலக்கியங்களைப் புரிந்துகொள்வதில் தமிழ் இலக்கியஅறபுச் சொல் அகராதியின்
முக்கியத்துவத்தை மதிப்பிடல் ஆய்வின் நோக்கமாக அமைந்துள்ளது. இஸ்லாமியத்
தமிழ் இலக்கியங்களை கற்பதில் உள்ள இடர்பாடுகளை தமிழ் இலக்கிய அறபுச்
சொல் அகராதி எந்தளவுக்கு தீர்க்கின்றது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில்
பொதிந்துள்ள கருத்துக்களை முழுமையாக விளங்கிக்கொள்ள தமிழ் இலக்கிய
அறபுச்சொல் அகராதி பெரிதும் உதவுகின்றது என்ற கருதுகோளை அடிப்படையாகக்
கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொழியியல், விமர்சனஆய்வு
அணுகுமுறைகள் பின்பற்றப்படடுள்ளன. முதல் நிலைத் தரவுகளாக இஸ்லாமியத்
தமிழ் இலக்கியங்களும் தமிழ் இலக்கிய அறபுச்சொல் அகராதியும் இரண்டாம்
நிலைத் தரவுகளாக அவைத் தொடர்பாக வெளிவந்துள்ள நூல்களும் கட்டுரைகளும்
பயன்படுத்தப்பட்டுள்ளன.