Abstract:
தஞ்சை மாவட்டத்திலுள்ள அபிவிருத்தீஸ்வரம் எனும் ஊரில் 1914 இல்
காதர்ஷாராவுத்தர், முகம்மது இபுறாஹீம் பாத்தும்மா ஆகியோருக்கு மகனாகக்
கவிகா. மு. ஷெரீப் அவர்கள் பிறந்தார். இவர், பெரியாரது சுயமரியாதை இயக்கம்
,காங்கிரஸ் மகாசபை போன்ற இயக்கங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டதுடன்
சமுதாய சீர்திருத்தவாதியாகவும் செயற்பட்டார். இந்திஎதிர்ப்பு, இந்திய சுதந்திரம்,
மன்னர் ஒழிப்பு, தமிழக எல்லைமீட்சி, நாடகவரிச்சட்ட நீக்கம் முதலிய பல்வேறு
போராட்டங்களில் ஈடுபட்டதுடன் தமிழ் ஆட்சிமொழி, தமிழ்; பயிற்சிமொழி,தமிழகப்
பெயர் அமைப்பு,பாரதி பாடல்களை தேசியமயமாக்குதல் முதலியவற்றை
செயற்படுத்துவதிலும், பல்வேறு தொழிலாளர் போராட்டங்களிலும் தம்மை ஈடுபடுத்திக்
கொண்டார். சமூகப் பணிகள் பலவற்றினை மேற்கொண்டதுடன் சமூகநலன் நோக்கிய
கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள், நாவல், குறுங்காவியம், கட்டுரைகள்,
என்பனவற்றினை வழங்கிதமிழ் மொழிவளர்ச்சிக்கும் பணிபுரிந்துள்ளார். அதாவது,
எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், படைப்பிலக்கியவாதியாகவும் நின்று இவர்
நல்கிய பணிகள் போற்றத்தக்கனவாகும். செய்குதம்பிப் பாவலர், அப்துல் கபூர்,
பாரதிதாசனார், நாமக்கல்லார், தேசிய விநாயகம்பிள்ளை, சுத்தானந்த பாரதியார்,
சா.து.யோகி ஆகியோரின், வழிவந்தவர்களில் இவரும் ஒருவராவார். இவர் தமிழ்,
தமிழ் நாட்டுஅரசு, பாரதநாடு, சமுதாயப் பார்வை, தொழிலாளர், இயற்கை, கலை,
காதல், மழலைச் செல்வம், வாய்மைநெறி, தத்துவமான தகைமையாளர்கள்,
கவியரங்கக் கவிகள்,கவிதைக் கடிதங்கள், பன்மணித்திரள், இறைவழிச் சிந்தனை
ஆகிய எண்ணக்கருக்களில் பல்வேறு தலைப்புக்களைக் கொண்ட கவிதைகளைப்
படைத்து அக்கவிதைகளினூடே பலகோணங்களில் சமூகமேம்பாட்டுக்கான
சிந்தனைகளை முன்வைத்துள்ளாhர். கவிகா. மு. ஷெரீப் கவிதைகளின் மூலம்
புலனாகும் சமூகமேம்பாட்டுச் சிந்தனைகளை வெளிக்கொண்டுவருவதனை
நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு அமைந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை
பெரும்பாலும் இன,மத,சாதி ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகக் காணப்படுகின்ற ஒரு
நாடாகும். இவ்வாறானதொரு நாட்டில் இலக்கியவாதிகள் பலரும் தமது
இலக்கியங்களினூடே சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைவவதற்கு முயன்றுள்ளனர்.
அவ்வாறு முயன்றவர்களுள் கவிகா. மு. ஷெரீபும் ஒருவர். எனினும் இவரது
கவிதைகள் பெருமளவில் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதே ஆய்வுப்
பிரச்சினையாகும். கவிகா.மு.ஷெரீப் கவிதைகள் சமூகமேம்பாட்டை வலியுறுத்துகின்றன
என்ற கருதுகோளின் அடிப்படையிலேயே இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாய்வில் சமூகவியல், ஓப்பீட்டு, விவரண ஆய்வுமுறைகள்
பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகள் இவ்வாய்வில்
பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாம் நிலைத் தரவாக கவி கா.மு. ஷெரீப்
கவிதைகளும், இரண்டாம் நிலைத் தரவாக இவ்வாய்வோடு தொடர்பான
நூல்கள்,சஞ்சிகைகள்,கட்டுரைகள் என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏளிய
மொழிநடையில் அமைந்த கவி.கா.மு. ஷெரீபின் கவிதைகள் பல்வேறு வகையிலும்
சமூக மேம்பாட்டை மையப்படுத்தியே அமைந்துள்ளன. குறிப்பாக,சமூக நல்லிணக்கம்,
தொழிலாளர் நலன்,பெண் நலன்,கல்விச் சமத்துவம்,அரசியல் மேம்பாடு,குடும்ப
நலமேம்பாடு, நற்பண்புகளை வளர்த்தல், தீயசெயல்களைக் களைதல் எனப் பல்வேறு
விடயங்களையும் வெளிப்படுத்துவனவாக இவரது கவிதைகள் அமைந்துள்ளன.