Abstract:
கல்வியென்பது ஒரு சமூகத்தின் அபிவிருத்தியில் முக்கியத்துவம் பெறுகின்றது. ஒரு
நாட்டின் அபிவிருத்தியில் கல்வி என்பது முக்கியமான குறிகாட்டியாகக்
கொள்ளப்படுகின்றது. அந்தவகையில் பல்லினச் சமுதாய மக்கள் கூடி வாழும் எமது
நாட்டில் அனைவருக்கும் கற்றலில் சம உரிமையை வழங்கப்படுவது
அவசியமாகின்றது. இதை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் கொள்கையளவில்
பல முயற்சிகளை எடுத்துவருகின்ற போதிலும் அதன் இலக்கு அடையப்பட்டமை
பற்றிப் பல விமர்சனங்கள் உள்ளன. எமது நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம்
பலரது கற்றல் நிலைமைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றமை மறுக்க
முடியாதது. 2009 இற்குப் பின்னர் வன்னிப் பிரதேசத்தில் மீள் குடியேறிய முஸ்லிம்
மக்கள் தமது பிள்ளைகளின் கற்றல் நிலைமைகளை ஒழுங்கமைப்பதில் பல
சவால்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக நாச்சிக்குடா பிரதேசத்திலேயே அவர்கள்
செறிவாகக் குடியேறியுள்ளனர். அங்கு, கிளிநொச்சிக்குடா முஸ்லிம் மகா
வித்தியாலயம் உள்ளது. அது ஒன்றே கிளிநொச்சிப் பிரதேசத்திலுள்ள ஒரே முஸ்லிம்
பாடசாலை. அங்கு 148 முஸ்லிம் பிள்ளைகள் கற்கின ;றனர். இவர்களுக்கான கற்றல்
சந்தர்ப்பங்களை வழங்குவதில் பெற்றோரும் பாடசாலைகளும் பல சவால்களை
எதிர்கொள்வதை அவதானிக்க முடிகின்றது. பெற்றோரின ; பொருளாதார நிலைமை,
அவர்களின் தொழில், பாடசாலைகளின் பௌதிகவள நெருக்கடி, ஆசிரியர்
பற்றாக்குறை, பெற்றோரும் பிள்ளைகளும் கற்றலில் காட்டும் ஆர்வம் போன்றன
அவற்றுள் குறிப்பிடத்தக்கன. இந்த நிலைமைகளைச் சீர்செய்வதில் குறிப்பிட்ட
தரப்பினர் எதிர்கொள்ளும் சவால்களும் பல உள்ளன. எனவே இந்த நிலைமை பற்றி
ஆய்வுசெய்வது அவசியமாகின்றது. நாச்சிக்குடா கிராமத்தில் உள்ள பாடசாலைக்குச்
செல்லும் பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்
ஆகியோரை ஆய்வு மாதிரிகளாகக் கொண்டே இந்த ஆய்வு
முன்னெடுக்கப்படுகின்றது. படைகொண்ட எழுமாற்று மாதிரி எடுத்தல் (Stratified
Random sampling) மூலம் ஆய்வுக்கான மாதிரிகள் தெரிவுசெய்யப்படுகின ;றன. கல்வி
கற்கும் தரம், பொருளாதார நிலைமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு
அவர்கள் மாதிரிகளாகத் தெரிவுசெய்யப்படுகின்றனர். பெற்றோர் மற்றும்
ஆசிரியர்களிடமிருந்து வினாக்கொத்து மூலம் பெறப்படுகின்ற தகவல்களை
அடிப்படையாகக் கொண்டே ஆய்வு முன்னெடுக்கப்படுகின்றது. மற்றும், அவதானிப்பு,
நேர்காணல் போன்ற தரவு சேகரிப்புக் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
திரட்டப்பட்ட தகவல்கள் தரவுகளாக்கப்பட்டு கணினியின் உதவியுடன் வரைபுகள்
மற்றும் அட்டவணைகள் மூலம் வியாக்கினமளிக்கப்படுகின்றன. இந்த ஆய்வு
அளவைநிலை ஆய்வாக (Survey research) மேற்கொள்ளப்படுகின்றது.இவற்றுக்கான
தீர்வுகளும் முன்வைக்கப்படுகின்றது. மாணவர்களின் ஒழுங்கான வரவின்மை,
பெற்றோரின் அக்கறையின்மை, குடும்பங்களின் பொருளாதார நெருக்கடி,
பாடசாலைகளின் வளப் பற்றாக்குறை, முஸ்லிம் ஆசிரியர்கள் இன்மை, பரிகாரக்
கற்பித்தலுக்கான பொறிமுறையின்மை போன்ற பல காரணிகள் அப்பிள்ளைகளின்
கற்றலில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது.
ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் கற்பித்தல் பொறிமுறை மற்றும் பெற்றோரிடையேயான விழிப்புணர்வு போன்றவற்றின் மூலம் இவை சீர்செய்யப்படுவது அவசியம் என்பதும்
இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாக அமைகின்றது.